பதிவு செய்த நாள்
05
ஆக
2022
11:08
மதுரை: ஆடி மாதம் முழுவதுமே அம்மன் கோவில்களில், கோலாகல திருவிழா நடக்கும். இன்று ஆடி வெள்ளியில், வரலட்சுமி விரதமும் சேர்ந்து வருவதால், பெண்கள் பக்தி பரவசத்துடன் கோயில்களில் தரிசனம் செய்து வருகின்றனர். மதுரை கோயில்களில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு, முந்தைய வெள்ளிக்கிழமையில், வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, இன்று ஆடி வெள்ளியில், வரலட்சுமி விரதம் அமைகிறது. ஏற்கனவே, ஆடி மாதத்தை ஒட்டி, அம்மன் கோவில்களில், உற்சவங்கள் களைகட்டியுள்ளன. பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இன்று, வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுவதால், ஏராளமான பெண்கள் அதிகாலை முதல் கோயில்களில் வழிபாடு செய்துவருகின்றனர். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆடி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று இந்த விரதத்தை பெண்கள் மேற்கொள்வர். தாலி பாக்கியம் நிலைக்க இந்த விரதம் இருப்பதுண்டு. தீர்க்க சுமங்கலியாக வாழ பெண்கள் லட்சுமி விரதம் அனுஷ்டிக்கின்றனர். லோகமாதாவாகிய லட்சுமிதேவி பாற்கடலில் தோன்றினாள். இவள் விஷ்ணுவை மணந்து, அவர் பூமியில் அவதாரம் எடுத்த நாட்களில் அவரோடு சேர்ந்து பிறந்தாள். ராமாவதாரத்தில் சீதையாகப் பிறந்து அவ ருடன் கானகத்தில் கஷ்டப்பட்டாள். தன் கற்பின் தன்மையை நிரூபிக்க தீக்குளித்து கணவரின் மனம் கோணாமல், அவரது நல்வாழ்வே பெரிதெனக் கருதி நடந்தாள். இதுபோலவே பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்க சுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.