பதிவு செய்த நாள்
09
ஆக
2022
08:08
அவிநாசி: கொங்கேழு தலங்களில் முதன்மையான தலமாகவும், மூர்த்தி,தலம்,தீர்த்தம் என்று முப்பெரும் சிறப்பு வாய்ந்ததாகவும், காசியில் வாசி அவிநாசி என போற்றுதலுக்குரிய அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தேவாரம் பாடிய மூவருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் முதலையுண்ட பாலகளை தன்னுடைய தேவாரப் பாடலால் உயிர்த்தெழுத்து கொடுத்தார்.
இதனையே, ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் திருக்கயிலாயம் சென்ற சுந்தரமூர்த்தி நாயனாரை வழிபட குரு பூஜை விழாவாக கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வினை போற்றும் விதமாக அவிநாசி அடுத்த செம்பியநல்லூரில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், 108 சங்கு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுந்தரர் பெருமானுக்கு மகா அபிஷேகம், சங்கு அபிஷேகம் அலங்காரம், தீபாரதனை மற்றும் திருமுறை விண்ணப்பங்கள் உள்ளிட்டவை நடைபெற்றது. மேலும் குருபூஜை விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களும்,சுந்தரமூர்த்தி நாயனார் பொது நல அறக்கட்டளை சார்பில், தலைவர் முத்துக்குமார் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினார்.