தஞ்சை அருகே மொகரம் கொண்டாடிய ஹிந்துக்கள் : தீ குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2022 11:08
தஞ்சாவூர், தஞ்சாவூர் அடுத்த காசவளநாடு புதூர் கிராமத்தில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இவர்கள் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக ஆண்டுதோறும் மொகரம் பண்டிகையை கிராம விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர்.
வழக்கம்போல் இந்த ஆண்டு மொகரம் பண்டிகையையொட்டி காசவளநாடு கிராமத்தில் ஹிந்துக்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேற 10 நாட்களுக்கு முன்பு விரதத்தை தொடங்கினர். மேலும் ஊரின் மையப்பகுதியான செங்கரையில் உள்ள சாவடியில் (ஊரின் பொதுவான இடம்) உள்ள அல்லாசாமி என்றழைக்கப்படும், உள்ளங்கை உருவம் கொண்ட பொருட்களை தனியாக எடுத்து பந்தல் அமைத்து விரதம் இருந்து, தினமும் அதற்கு பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி வழிபாடு நடத்தி வந்தனர். நேற்று இரவு அல்லா சாமிக்கு மாலை அணிவித்து வீதி உலாவாக ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்து சென்றனர். அங்கு வீடுகளில் புது மண் கலயம் மற்றும் புது பாத்திரங்களில் பானகம், அவல், தேங்காய், பழம் வைத்து அல்லா சாமியை கிராம மக்கள் வரவேற்றனர். இன்று (09 ம் தேதி) அதிகாலை வரை கிராமம் முழுவதிலும் உள்ள வீடுகளுக்கு இந்த அல்லா சாமி தாரை, தப்பட்டையுடன் எடுத்து செல்லப்பட்டது.ஒவ்வொரு வீட்டிலும் எலுமிச்சை மாலை மற்றும் பட்டுதுண்டை சாத்தி வழிபட்டனர். பின்னர் மீண்டும் செங்கரையில் சாவடிக்கு வந்ததும் அங்கு தீமிதிக்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது அல்லா சாமியை தூக்கி வந்தவர்கள் முதலில் தீ குண்டத்தில் இறங்கினர். இதைத்தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக விரதம் இருந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இது குறித்து காசவளநாடு புதூரை சேர்ந்தவர்கள் கூறும்போது, இஸ்லாமியரின் பண்டிகையான மொகரம் பண்டிகையை ஹிந்துக்கள் அதிகம் உள்ள எங்களது ஊரில் எங்களது முன்னோர்கள் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து பாரம்பரியமாக 300 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் கொண்டாடி வருகிறோம். எங்கள் கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பு குளம் வெட்டப்பட்டபோது உள்ளங்கை உருவத்தில் உலோகம் கிடைத்தது. அது அல்லாவின் கையாக கருதி கோவில் அமைத்து வழிபாடு செய்து வருகிறோம். இவ்விழாவை ஹிந்துக்கள் கொண்டாடும்போது இஸ்லாமியர்களும் உடன் இருந்து அவர்களும் வழிபடுகின்றனர். எங்கள் ஊரில் பிறந்த பெண்கள் அனைவரும் மொகரம் திருவிழாவின்போது பிறந்த வீட்டிற்கு வந்து பானகம் தயாரித்து அல்லாவுக்கு வழங்குவதை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர். அல்லா என்று எங்களால் அழைக்கப்படும் உள்ளங்கை உருவம் தாங்கியவற்றை நாங்கள் கரகம் எடுப்பதுபோல் அதற்கு பூக்களால் அலங்கரித்து இரவு முழுவதும் வீடு, வீடாக சென்ற பின்னர் விடியற்காலையில் அல்லாவிடம் வேண்டி கொண்டு தீ குண்டம் இறங்குவோம் என்றனர்.