Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேசியக்கொடி வண்ணத்தில் மிகுந்தது ... அறம், பொருள், இன்பத்தை அளிக்கட்டும் சுதந்திரம் மஹா பெரியவர் அருளுரை அறம், பொருள், இன்பத்தை அளிக்கட்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விடுதலை வேள்வியில் விவேக அக்னி : சுவாமி விமூர்த்தானந்தர்
எழுத்தின் அளவு:
விடுதலை வேள்வியில் விவேக அக்னி :  சுவாமி விமூர்த்தானந்தர்

பதிவு செய்த நாள்

15 ஆக
2022
07:08

சுதந்திர தினத்தை ஒரு நாள் கொண்டாட்டமாக மட்டுமே கருதுவதா? அல்லது பெற்ற சுதந்திரத்தை எவ்வாறு பாதுகாப்பது என்று அந்த நாளில் ஆழ்ந்து ஆலோசிப்பதா? அல்லது சுதந்திரத்திற்காகத் தன்னுயிர் ஈந்த தியாக சீலர்களின் வரலாற்றை அன்றாவது கற்பதா? அல்லது கற்றதை அடுத்த தலைமுறைக்கு அன்றாவது கற்பிப்பதா? இவை போன்ற கேள்விகள் நமக்குள் எழுந்தால் நம் பாரதம் என்றும் நிமிர்ந்து நிற்கும்.

மாறாக, மத, ஜாதி, மாநில, கட்சி ரீதியில் மக்களை மாற்றி, இல்லை இல்லை, ஏமாற்றிப் பிரித்தாளுபவர்கள் இன்றும் நம்மிடையே உள்ளனர். நாட்டின் பெருமை தெரியாத அல்லது நாட்டின் மேன்மையை, உண்மையான வரலாற்றை நமக்குக் கற்றுத் தராத அவலம் அதிகரித்து வருகிறது. கிரிக்கெட்டில் இங்கிலாந்து அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக நம் வீரர்கள் விளையாடும்போது மட்டுமே நாம் தேசபக்தர்களாகிறோம், அதுவும் நமது அணி வெற்றி பெற்றால்தான்.

இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தி என்கிறோம். தேசத் தந்தைக்கு ஒரு ஞானத்தந்தை உண்டு. "விவேகானந்தரின் கருத்துகளை வாசித்த பிறகு எனது தேச பக்தி ஆயிரம் மடங்காகப் பெருகியது" என்று காந்தி மகானே கூறினார்.
ஒட்டுமொத்த இந்தியாவையும் அதன் பாரம்பரியத் தொன்மையையும் அவற்றோடு இந்தியாவின் பிரச்னைகளையும் ஒருங்கே நமக்குக் காட்டிக் கொடுத்தவர் தேசபக்த துறவியான சுவாமி விவேகானந்தர்.

பாரதத்தின் தொன்மையைப் போற்றியவர்கள் பலர். அவர்களுள் பலரும் இந்தியாவில் புரையோடியிருந்த பிரச்னைகளை அறியாமல் இருந்தார்கள். பிரச்னைகளை அறிந்தவர்களோ பாரதத்தின் ஆன்மீக மகிமையை அறியாமலே இருந்து அந்நியப்பட்டுப் போனார்கள். மக்கள் முன்னேற்றமே தேச முன்னேற்றம் என்பதை சுவாமிஜி பறைசாற்றினார். இந்தியாவின் வீழ்ச்சிக்கு இரண்டு காரணங்கள் என்று சுவாமி விவேகானந்தர் கண்டறிந்தார். பாமர மக்களைப் புறக்கணித்ததும் பெண்களுக்குக் கல்வி தர மறுத்ததும் பாரத நாட்டின் முன்னேற்ற மின்மைக்குக் காரணம் என்று சுதந்திரத்திற்கு முன்பே காண்பித்துக் கொடுத்தார்.

சுவாமி விவேகானந்தர் மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்று சுகமாகப் போகிறவன், அந்த மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றால் அவனைத் துரோகி என்றே அவர் அழைத்தார்.இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிதவாதிகளுக்கும் தீவிரமாகப் போராடியவர்களுக்கும் தேசபக்தியைத் தூண்டி விட்டது விவேகானந்தரின் தேசத்தை நிர்மாணம் செய்யும் கருத்துகள் அடங்கிய நூல்களே. காந்திஜிக்கும் நேதாஜிக்கும் சுவாமிஜி எழுச்சி ஊட்டினார் என்பது வரலாறு.  சுவாமி விவேகானந்தர் சென்னையில் உரையாற்றியபோது ஆங்கிலக் கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும் என்பதைத் தெளிவாக முழங்கினார். அதற்காக அருமையான கால அளவையும் திட்டமிட்டு நிர்ணயித்து தந்தார்: "அடுத்த 50 ஆண்டுகளுக்கு உங்களது மற்ற கடவுளர்களைச் சற்று மறந்து விடுங்கள். நீங்கள் வரும் 50 வருடத்தில் வழிபட வேண்டிய ஒரு கடவுள் பாரத மாதாதான்" என்று சுதந்திர மார்க்கத்தைக் காட்டினார்.

சுவாமிஜி அவ்வாறு முழங்கியது 1897 -ஆம் ஆண்டு. அந்த ஆண்டோடு 50 ஆண்டுகளைக் கூட்டிப் பாருங்கள். அடைந்தது ஆனந்தம் மட்டுமல்ல, சுதந்திரமும்தான். சுவாமிஜியின் தேசபக்தியைப் பெருமளவில் உள்வாங்கிக் கொண்டவர் சகோதரி நிவேதிதை என்ற மார்கெட் நோபில் ஆவார். அவர் நாட்டு மக்களுக்கு நேரடியாக அதிகமாக உரை நிகழ்த்தவில்லை. ஆனால் அன்றைய தேசத் தலைவர்கள் பெரும்பாலோருக்குச் சுதந்திர தாகத்தைத் தீர்த்து வைத்தார். ஓர் உதாரணம். 1905 -இல் கொல்கத்தாவில் காங்கிரஸ் மாநாட்டை முடித்துவிட்டு மகாகவி பாரதியார் சகோதரி நிவேதிதையைச் சந்தித்தார். அந்தச் சமயத்தில்தான் விடுதலைப் போராட்டத்திற்கு ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் அவசியம் தேவை என்பதை சகோதரி பாரதியாருக்கு உணர்த்தினார்.

அதோடு, பாரத மாதா என்பது தேசபக்தியின் உணர்ச்சி கலந்த ஒரு கற்பனை பாத்திரம் என்று பலரும் கருதினார்கள். பாரத மாதா கற்பனை அல்ல, அவள் நிஜம்தான் என்று ஓர் ஆன்மீக காட்சி மூலம் உணர்வுமயமான பாரத மாதாவை சகோதரி நிவேதிதை மகாகவிக்குக் காட்டி அருளினார். இதன் பிறகுதான் வந்தே மாதரம் -தாயே வணக்கம் என்ற பாரதியாரின் சொற்களில் விடுதலைப் பெறுவதில் இருந்த சோம்பலைச் சுட்டெரிக்கும் தீ தேங்கிற்று. நிவேதிதையைத் தனது குருவாக பாரதியார் வரித்துக் கொண்டார். அந்த வகையில் பாரதியாரின் பரமகுருவாக சுவாமி விவேகானந்தர் விளங்கினார். சுவாமிஜியின் கருத்துகளை ஆழ்ந்து வாசித்த பாரதியார் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முயற்சிகளில் விவேகானந்தரின் முயற்சியானது தாய் முயற்சி என்று ஆவணப்படுத்தினார்.

சுவாமி விவேகானந்தர் தெற்கே கொழும்பு முதல் வடக்கே அல்மோரா வரை தேச பக்தி கனலை எழுப்பினார்; அவற்றோடு சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு நாட்டு மக்களைத் தயார்படுத்தினார். தனிமனித முன்னேற்றம், பாதுகாப்பான தேசத்தின் பாரம்பரியம், அதன் வீரியம், இளைஞர்கள் சமுதாயப் பொறுப்பை ஏற்க வேண்டிய அவசியம் போன்றவற்றைப் பற்றியெல்லாம் சுவாமிஜி சிங்கமென முழங்கினார். தன்னம்பிக்கைச் செல்வங்களான தனி மனிதர்களை உருவாக்குவதில் சுவாமிஜி மிகுந்த கவனம் செலுத்தினார். அவர்களிடம் தேசபக்தியையும் தெய்வ பக்தியையும் மிளிரச் செய்ததில் அவர் ஆனந்தம் அடைந்தார். அப்படிப்பட்ட ஒருவர் அதுவும் அவர் இந்தியர் அல்லர், அமெரிக்கப் பெண்மணி. தன் குருவான சுவாமி விவேகானந்தர் கூறிய ஒரு வார்த்தையை மதித்துத் தனது மொத்த வாழ்க்கையையும் இந்திய நாட்டின் திருப்பணிக்கு அவர் ஒப்படைத்துக் கொண்டார். சகோதரி கிறிஸ்டீன் இந்தியப் பெண்கள் மற்றும் அவர்களது கல்வி முன்னேற்றத்திற்குச் செய்த சேவை நம்மைப் பிரமிக்க வைக்கும்.

இவ்வளவு பெரும் சேவைகளை இந்தியாவிற்குச் செய்வதற்கு உங்களுக்கு எவ்வாறு சக்தி வந்தது? என்று ஒருவர் சகோதரி கிறிஸ்டீனிடம் கேட்டார். அதற்கு அந்த அமெரிக்கச் சகோதரி, "என்று சுவாமி விவேகானந்தரின் திரு வாயிலிருந்து இந்தியா என்ற பெயர் உச்சரிக்கப்பட்டு அதை நான் கேட்டேனோ, அந்தக் கணமே எனக்குள் சக்தி புகுந்தது என்று எண்ணுகிறேன்" என்றார். ஆங்கில அரசும் அதன் அவசரக் கலாச்சாரமும் நம் நாட்டில் பலவிதமான கொள்ளைகளைச் செய்தன. அவற்றில் மிகவும் கொடுமையான ஒன்று நமது கலாச்சார மற்றும் பண்பாட்டுக் கொள்ளை ஆகும். உடலளவில் இந்திய தோலுடன் சிந்தனையில் ஆங்கிலேயனாகவே இந்தியர்கள் இருக்க வேண்டும் என்று ஆங்கிலேய அரசு திட்டமிட்டுச் செயலாற்றிக் கொண்டிருந்தது. கலாச்சார கொள்ளையை, ஆன்மீகத்தைச் சிதைக்கும் கொடுமையை, அவற்றின் மூலமாக நம் மக்கள் என்றென்றும் அந்நிய கலாச்சாரத்திற்கு அடிமை ஆவதை சுவாமி விவேகானந்தர் கண்டு வெகுண்டு எழுந்தார்.

இந்தியாவின் வரலாற்றை மேலைநாட்டினர் திரித்து எழுதினார்கள்; அதனை நாம் இன்று வரை கச்சிதமாக மனப்பாடம் செய்து வருகிறோம். ரத்தத்தால் இந்தியனாகவும், வீரியத்தால் வெள்ளைக்காரனாகவும்  பலரும் அந்த வரலாற்றைப் போதித்து வருகிறார்கள். அதனால் இன்றைய இளைஞனுக்கு தேசப்பற்றில் ஓர் ஒவ்வாமை இருக்கிறது. இதற்காகத்தான் சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் உண்மையான வரலாற்றை இந்தியர்களே எழுத வேண்டும் என்று விரும்பினார். எல்லாத் துறைகளிலும் இந்தியா முன்னேற வேண்டும் என்று விவேகானந்தர் முழங்கினார். அதனால் தான் தொழில் துறையில் ஜே. ஆர். டி. டாடாவிற்கு உற்சாகமூட்டியது போன்று விஞ்ஞான ஆராய்ச்சியில் ஜே.சி. போஸுக்கும் சுவாமிஜி வழிகாட்டினார்.

ஆங்கிலேய ஆட்சியை அகற்றிச் சுதந்திரத்தை இன்றே என்னால் வாங்கித் தர முடியும். ஆனால் அந்தச் சுதந்திரத்தைப் போற்றி பாதுகாக்ககூடிய மனிதர்கள் எங்கே? என்று கேட்டது பலரையும் சிந்திக்க வைத்தது. உண்மைதானே, கத்தியின்றிச் சுதந்திரம் வாங்கிவிட்டோம்; ஆனால் புத்தியின்றி அதை அவமதித்து இழந்து வருகிறோம். அந்நியன் போதும் போங்கடா என்று வீசிவிட்டுச் சென்ற சுதந்திரத்தை வாங்கி வைத்துக் கொண்டது போன்று நம் நிலை இருக்கிறதோ என்று தோன்றுகிறது. வீரா வேசத்துடன் போராடிப் பெற்ற சுதந்திரம் என்றால் அதனை இன்னும் நன்றாக நம் மக்களால் பாதுகாக்க முடிந்திருக்குமோ!

துறவி வேந்தரான சுவாமி விவேகானந்தர் இந்திய நாட்டையே தமது தேகமாக உணர்ந்தார். அதனால் அவருக்கு தேகாத்ம புத்தி அன்று தேசாத்ம புத்தி இருந்தது என்கிறார் அவரது சகோதர சீடர் சுவாமி அகண்டானந்தர். இவரது சீடர்தான் பிற்காலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவராக விளங்கிய குருஜி கோல்வல்கர் என்பது குறிப்பிடத்தக்கது. தேசபக்தியை நாட்டு மக்களிடம் குறிப்பாக, இளைஞர்களிடம் சுவாமிஜி புகுத்தினார். பாரத நாடு சுதந்திரம் அடையட்டும் என்ற முதல் லட்சியத்தை மக்களின் கண் முன்னே வைத்தார். பிறகு பாரத நாடு புத்திளமையுடன் விழிப்புற்ற தேவியாக விளங்குவதைக் கண்டார்; நம் மக்களுக்கு அதையே காட்டினார். பாரதப் பெருமையைப் பாருக்கு முழங்கினார். மிக முக்கியமாக, "....உலகம் முழுவதையும் பாரதம் வெல்ல வேண்டும்; அதற்கு குறைவான எதுவும் நம் லட்சியம் அல்ல. ஓ இந்தியா! விழித்தெழு! உனது ஆன்மீகத்தால் உலகை வெற்றி கொள்" என்று முழங்கினார். சுதந்திர இந்தியா புவனத்திற்கு வழங்கும் ஆசீர்வாதம் அதுதான். அந்த முழக்கம் அகிலத்திற்குத் தொடர்ந்து கேட்கும் வகையில் கும்பகோணத்தில் விவேகானந்தர் உரையாற்றிய அதே இடத்தில் அவருக்கு 7 அடி வெண்கலச் சிலை ஒன்று இந்த வருட சுதந்திர தினத்தில் நிறுவப்பட உள்ளது. 75 ஆவது சுதந்திர தினத்தில், சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பிய 125 ஆவது ஆண்டை கும்பகோணத்தை மையமாக வைத்து நம் தேசம் இவ்வாறு கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடக்கும் ஆவணி மூல திருவிழாவில் பாண்டியராஜாவாக ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை பகவதியம்மன், பக்த ஆஞ்சநேயர் கோயில்களில் கடந்த ஜூலையில் கும்பாபிஷேகம் நடந்ததை ... மேலும்
 
temple news
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா விமர்சையாக ... மேலும்
 
temple news
பாலசமுத்திரம்; பழநி, பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்சவ விழா கொடி ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் ஞாயிற்றுகிழமை மாலை நடைபெற உள்ள பௌர்ணமி பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar