பதிவு செய்த நாள்
17
ஆக
2022
12:08
உத்திரமேரூர் : சாத்தணஞ்சேரி, பச்சயைம்மன் கோவில் ஆடி மாத விழாவையொட்டி, அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தணஞ்சேரி பச்சையம்மன் கோவிலில், கடந்த மாதம் புதியதாக கருவறை கோபுரம், ராஜகோபுரம், மகாமண்டபம், வினாயகர் கோவில், முருகர் கோவில் ஏற்படுத்தப்பட்டு, மகா கும்பாபிசேகம் நடைபெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம், தீமிதி விழா நடப்பது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் காரணமாக விழா நடைபெற வில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இந்த ஆண்டுக்கான விழா கடந்த ஞாயிறன்று நடந்தது. அன்று, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாரதணை நடந்தது. காப்பு கட்டி விரதம் இருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், அன்று இரவு தீ மிதித்து தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினர். விழாவின் நிறைவாக நேற்று முன்தினம் இரவு, மலர் அலங்காரத்தில் பச்சையம்மன் எழுந்தருளி, அப்பகுதி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தார். அப்போது, பக்தர்கள் தேங்காய் உடைத்து, தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.