பதிவு செய்த நாள்
18
ஆக
2022
11:08
ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா, ஆக.22 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில், மிகவும் பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் கருவறை மூலவர் மீது, பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் அமைய பெற்றுள்ளதால், இந்த விநாயகர், வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் ஆண்டு தோறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் கொண்டாடப்படுகின்றன. அதன் அடிப்படையில், ஆக.22 ல் காலை சதுர்த்தி விழா, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொடியேற்றத்துடன் விழா துவங்கியதை தொடர்ந்து, தினமும் மாலையில், விநாயகர் வெள்ளி மூஷிகம், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவின் எட்டாம் நாளான, ஆக. 29 ல், சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. தொடர்ந்து மறுநாளில், தேரோட்டம் நடைபெற்று, ஆக.31ல் சதுர்த்தி தீர்த்தவாரியுடன், சதுர்த்தி விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில், ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்.