மயிலாடுதுறை: சீர்காழியில் சொக்கநாதர் பூஜை மடத்துடன் கூடிய ஸ்ரீலஸ்ரீ கைகளை மாசிலாமணி சுவாமிகள் நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனத்தின் அருள் ஆட்சிக்கு உட்பட்ட 28 தேவஸ்தானங்களிலும், ஸ்ரீ சொக்கநாதர் பூஜை மடத்துடன் கூடிய கட்டளை மடங்கள் பழையன புதுப்பித்தும், புதியன கட்டப்படும் திறப்பு விழா செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஞானசம்பந்தப் பெருமான் ஞானப்பால் அருந்திய சட்டநாதர் கோவில் கிழக்கு சன்னதியில் புதிதாக ரூ 68 லட்சம் மதிப்பில் பழமையும், புதுமையும் கலந்த கருங்கல் வேலைப்பாட்டுடன் கூடிய சொக்கநாதர் பூஜை மடம், ஸ்ரீலஸ்ரீ கயிலை சுவாமிகள் நிலையம் இன்று காலை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் இசைக்க திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆதின கட்டளை தம்பிரான்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருவருளும், குருவருளும் பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன கோவில்களில் தலைமை கண்காணிப்பாளர் மணி மற்றும் சீர்காழி சட்டநாதர் கோவில் கண்காணிப்பாளர் செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.