புவனகிரி: கீரப்பாளையம் திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீசோமநாதர், ஸ்ரீபூர்ணாம்பிகா, புஷ்பகலா சமேத ஸ்ரீ அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடந்தது. சுற்றுபகுதியைச் சேர்ந்தவர்களுடன் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குலதெய்வ வழிபாட்டினர் பங்கேற்றனர். கடலுார் மாவட்டம், புவனகிரி அருகே கீரப்பாளையம் திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீசோமநாதர் மேற்கு பக்கம் பார்த்து அருள்பாலிப்பது மிகவும் சிறப்பாக உள்ளது. இக்கோவில் வளாகத்தில் ஸ்ரீபூர்ணாம்பிகா, புஷ்பகலா சமேத ஸ்ரீ அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்கள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். தமிழகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இக்கோவில் குலதெய்வ வழிபாட்டினர் வசிக்கின்றனர். இக்கோவில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் வெகு விமர்சியாகநடந்தது. விழாவை யொட்டி கடந்த 17 ம் தேதி தேவதா, அனுக்ஞை மற்றும் விக்னேஸ்வர பூஜைகளுடன் நிகழ்ச்சி துவங்கியது. தினசரி பல்வேறு பூஜைகள் நடந்து வந்தது. நேற்று காலை ஆறாம் கால யாக பூஜை துவங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகளுக்குப் பின் கடம் புறப்பாடு துவங்கி, கோவிலை வலம் வந்து கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடந்தது. கீரப்பாளையம் சேர்மன் கனிமொழிதேவதாஸ்படையாண்டவர் மற்றும் சுற்றுபகுதியைச் சேர்ந்தவர்களுடன் தமிழகம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த குலதெய்வ வழிபாட்டினர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். சிதம்பரம் டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் மேற்பார்வையில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இன்று 22 ம் தேதியில் இருந்து மண்டல அபிேஷகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர்கள் செய்துள்ளனர்.