உத்தர பிரதேசத்திலுள்ள மதுரா மாவட்டம் பிருந்தாவனில் கிருஷ்ணர், ராதைக்கு பல கோயில்கள் உள்ளன. இதில் புகழ் மிக்க பங்கே பிகாரி கோயிலில் மூலவராக ராதாகிருஷ்ணர் இருக்கிறார். பங்கே பிகாரி என்பதற்கு ‘வளைந்து கொடுத்து மகிழ்பவர்’ என்பது பொருள். தன் காதலியான ராதாவிற்காக உடலை வளைத்த நிலையில் கிருஷ்ணர் இருக்கிறார். இவர் அவதரித்த இடம் மதுரா என்றாலும் பிருந்தாவனமே சிறுவயது விளையாடல்கள் நடந்த இடமாகும். இங்கு தரிசிப்பதை பெரும் பாக்கியமாக பக்தர்கள் கருதுகின்றனர். கோகுலத்தில் கிருஷ்ணர் அவதரித்த போது ேஹாமங்கள் நடத்தி பெயர் சூட்டு விழா நடத்தியவர் ஸ்ரீகர்காசாரியார். அவரது பரம்பரையில் வந்தவர் சுவாமி ஹரிதாஸ் என்பவர். இவர் பாகிஸ்தானில் உள்ள முல்டன் என்னும் பகுதியில் வசித்து வந்தார். 1600ம் ஆண்டில் அங்கிருந்து தன் சொந்த ஊரான மதுராவிற்கு அவர் குடியேறினார். ஒருநாள் பிருந்தாவனத்தில் பக்திப்பாடல்கள் பாடிய நிலையில் ராதையுடன் கிருஷ்ணர் நடனக் கோலத்தில் இவருக்கு காட்சியளித்தார். அந்த கிருஷ்ணரே சிலை வடிவில் இங்கு மூலவராக இருக்கிறார். 1862ல் கோஸ்வாமி என்பவர் ராஜஸ்தான் அரண்மனை பாணியில் பிரம்மாண்டமான கோயிலை உருவாக்கினார். மூலவர் கிருஷ்ணர் கறுப்பு நிறக் கல்லால் ஆனவர். காலை 8:30 மணிக்கு ஆடை, ஆபரணம் சூடிய நிலையில் உள்ள ஸ்ரீருங்கா தரிசனமும், மதியம் 1:00 மணிக்கு பகல் நைவேத்யத்தின் போதும், இரவு 8:30 மணிக்கு துாக்க ஆரத்தி பூஜையும் இங்கு முக்கியமானவை. பூஜையின் போது மணி ஒலிக்கும் வழக்கம் இல்லை. ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கிருஷ்ண ஜயந்தியன்று அதிகாலையில் சுவாமி கண் விழித்ததும் மங்கள ஆரத்தியைக் காணலாம். அட்சய திரிதியை அன்று மட்டுமே சுவாமியின் திருவடிகளை தரிசிக்க முடியும். சரத்கால பவுர்ணமியன்று புல்லாங்குழல் இசைத்தபடி கிருஷ்ணரைக் காணலாம். ஹோலியின் போது ஐந்து நாட்களுக்கு கோபியர்களுடன் பங்கே பிகாரி கிருஷ்ணர் காட்சியளிக்கிறார். எப்படி செல்வது மதுராவில் இருந்து 13 கி.மீ.,