திருச்செந்துார் ஆவணித் திருவிழா சுவாமி வெள்ளித் தேரில் வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2022 08:08
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித்திருவிழாவில் சுவாமி குமரவிடங்கபெருமான் பெரிய வெள்ளி தேரிலும், வள்ளி அம்பாள் இந்திரவாகனத்திலும் எழுந்தருளினர். இன்று சுவாமி சிவப்பு சாத்தி வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா கடந்த17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் 6ம்நாளான நேற்று சுவாமி கு மரவிடங்கபெருமான் வெள்ளி தேரிலும், வள்ளி அம்பாள் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி உள்மாடவீதிகள் மற்றும் ரதவீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர்.
சண்முகர் வீதியுலா 7ம் திருநாளைமுன்னிட்டு இன்று(23ம்தேதி) அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சுவாமி சண்முகரின் உருகு சட்ட சேவை நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 9 மணிக்கு மேல் ஆறுமுகநயினார் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி, பிள்ளையன் கட்டளை மண்டபத்தை வந்து சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. மாலை4.30 மணிக்கு சுவாமி சண்முகப்பெருமான் தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்தி சிவன் அம்சத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.