பதிவு செய்த நாள்
17
ஆக
2012
11:08
ஓசூர்: ஓசூர், சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலில், கர்நாடகாவைச் சேர்ந்த, 52 மடாதிபதிகள் பங்கேற்ற சிறப்பு வருண யாகம் நடந்து வருகிறது. ஓசூர், சந்திரசூடேஸ்வரர் மலையில், சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. 1,000 ஆண்டு பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் வந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர்.இக்கோவிலில் உள்ள ஜலகண்டேஸ்வரர் லிங்கம், காளிகாம்மா, கோமடேஸ்வரா சன்னிதிகள் சிறப்பு வாய்ந்தவை. மழையில்லாத காலங்களில், இந்த லிங்கம் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு யாகம் செய்தால், உடனடியாக மழை பெய்யும் நம்பிக்கை.தற்போது, பருவ மழை பொய்த்ததால், விவசாயப் பணிகள் பாதித்ததோடு குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழகம் முழுவதும் பொதுமக்கள், சமூக ஆர்வலர் அமைப்பினர் மழைக்காக சிறப்பு யாகம், பூஜை நடத்தி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று, மழைக்காக, அனைத்து இந்து கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில், ஜலகண்டேஸ்வரர் லிங்கம், காளிகாம்மா, கோமடேஸ்வரா சன்னிதியில், லயன்ஸ், ரோட்டரி சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில், சிறப்பு வருண யாக பூஜை நடந்தது.நேற்று அதிகாலை, 7.30 மணிக்கு, சிறப்பு வருண யாகம் துவங்கியது. இந்த யாகம் மற்றும் வழிபாடு, வரும் 18ம் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. வருண யாகம் பூஜை, கர்நாடக மாநிலம், சிங்கேரி பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட, 52 மடாதிபதிகள் செய்கின்றனர். அவர்கள், தொடர்ந்து மூன்று நாள் தங்கியிருந்து, இந்த யாகத்தை நடத்துக்கின்றனர். யாகம் மற்றும் பூஜையில் நகராட்சித் தலைவர் பாலகிருஷ்ணரெட்டி, லயன்ஸ் சங்க, ஒய்.வி.எஸ்., ரெட்டி, சமூக ஆர்வலர் ராதா மற்றும் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.