பதிவு செய்த நாள்
30
ஆக
2022
08:08
திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு இன்று மாலை தேரோட்டமும், மூலவர் சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெறும். நாளை காலை தீர்த்தவாரி நடை பெறும். இக்கோயிலில் சதுர்த்திப் பெருவிழா ஆக.22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. ஆறாம் திருநாளில் கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று இரவு குதிரை வாகனத்தில் விநாயகர் திருவீதி வலம் வந்தார் . இன்று 9ம் நாளை முன்னிட்டு தேரோட்டம் நடை பெறுகிறது. காலை 8:30 மணிக்கு விநாயகரும், சண்டிகேஸ்வரரும் தேரில் எழுந்தருள்கின்றனர். தொடர்ந்து சிறப்பு பூஜை நடை பெறும். பின்னர் பக்தர்கள் அர்ச்சனை செய்து சுவாமிவழிபாடு தொடரும். மாலை 4:30 மணிக்கு மூலவர் சந்தனக்காப்பில் அருள்பாலிப்பார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மூலவருக்கு இந்த அலங்காரம் நடைபெறும். இரவு 10:30 மணி வரை பக்தர்கள் மூலவரை தரிசிக்கலாம். மாலை 4:45 மணி அளவில் தேரோட்டம் நடை பெறும். நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உற்ஸவிநாயகர் திருகுளத்தின் தெற்கு கரையில்
எழுந்தருள்வார் . தெற்குபடித்துறையில் அங்குசத்தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்து காலை 10:00 மணிக்கு மேல் தீர்த்தவாரி நடை பெறும். மதியம் 1:30 மணிக்கு 18 படி பச்சரிசியிலான முக்கூருணி மோதகம் மூலவருக்கும் படைக்கப்படும். இரவு 8:30 மணிக்கு ஐம்பெரும் கடவுளர்கள் திருவீதி வலம் வருவார்கள்.