மும்பை : மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் கிங்ஸ் சர்க்கிள் பகுதியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா, 316 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மஹாராஷ்டிராவில் மிகச் சிறப்பாக கொண்டாடுவர்.
மும்பையில் ஜி.எஸ்.பி.,சேவா மண்டல் என்ற அமைப்பின் சார்பில், கிங்ஸ் சர்க்கிள் பகுதியில் மிகப் பிரமாண்ட விநாயகர்சிலை வைத்து, 10 நாட்களுக்கு விழா நடத்தப்படும். இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர்.கிங்ஸ் சர்க்கிளில் இந்த ஆண்டு நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழா, 316.4 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் தங்கம், வெள்ளி ஆபரணங்கள், பந்தல், மண்டபத்துக்கு மட்டுமின்றி தன்னார்வலர்கள்,அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்களுக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. கிங்ஸ் சர்க்கிளில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டுமே காப்பீடு செய்யப்பட்டாலும், இது தான் மிக அதிகமான காப்பீட்டு தொகையாகும்.