பதிவு செய்த நாள்
31
ஆக
2022
07:08
திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இக்கோயிலில் சதுர்த்திப் பெருவிழா ஆக.22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில்திருவீதி உலாவும் நடந்தது. நேற்று 9ம் திருநாளை முன்னிட்டு காலை 8:30 மணிக்கு விநாயகரும், சண்டிகேஸ்வரரும் தேர்களில் எழுந்தருளினர்.தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்து அறங்காவலர்கள் நா.கருப்பஞ்செட்டியார், சித.சுப்பிரமணியன் செட்டியார் வடம் பிடித்தனர். பின்னர் பக்தர்கள் அர்ச்சனை செய்து சுவாமி வழிபாடு செய்தனர். மாலையில் மழை பெய்யத்துவங்கியது. இருப்பினும் பக்தர்கள் மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசனம் செய்தனர். மழை குறைந்ததும் மாலை 5:00 மணி அளவில் தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் உற்சாகமாக விநாயகர் தேரை இழுத்துச் சென்றனர். சண்டிகேஸ்வரர் தேரை பெண்களும், சிறுவர்,சிறுமியரும் அதிகமானோர் பங்கேற்று இழுத்துச் சென்றனர். இரவில் யானை வாகனத்தில் விநாயகர் திருவீதி உலா நடந்தது. இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அங்குசத்தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்து காலை 10:00 மணிக்கு மேல் கோயில் குளத்தில் தீர்த்தவாரியும், மதியம் 1:30 மணி அளவில் முக்கூருணி மோதகம் மூலவருக்கும் படையலும், மாலையில் பரத நாட்டியம், ஆன்மீக சொற்பொழிவு, இசை நிகழ்ச்சியும், இரவு 11:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடந்து சதுர்த்திப் பெருவிழா நிறைவடைகிறது.