Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » பாபா ராமதாஸ்
பாபா ராமதாஸ் சுவாமிகள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 ஆக
2012
05:08

ஸ்ரீராம நவமி, சீதா கல்யாணம் கொண்டாடப்படும் நன்னாட்களில், ராம நாமத்தையே சதா சர்வ காலமும் தியானித்து, சுற்றியிருக்கும் எல்லாப் பொருட்களிலும் ராமனே இரண்டற கலந்திருப்பதாகப் பாவித்து, எல்லாமே ராமன், அனைத்தும் ராமனுக்கே சமர்ப்பணம்! என்று உபதேசித்த முற்றும் துறந்த ஒப்பற்ற மகான் பாபா ராமதாஸ் சுவாமிகள். பப்பா என்று எல்லோராலும் ஆசையுடன் அழைக்கப்பட்டவர். கேரளா காசர்கோடு ஜில்லாவில் கஞ்சன்கோடு கிராமம் அமைந்துள்ளது. கிராமத்தின் பெயரிலேயே விளங்கும் ரயில் நிலையத்திலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் ஊர் உள்ளது. இது மங்களூரு - öஷாரனூர் ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது. 1884-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி பவுர்ணமி தினம்.. அன்றைய தினம் ராமதூதனான அனுமனின் ஜயந்தி விழா வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வந்தது. அந்த தருணத்தில், பகவான் நாராயணனின் பூரண அருளுடன் பாலகிருஷ்ணா ராவ் - லலிதா பாய் தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. விட்டல் ராவ் எனப் பெயரிடப்பட்ட அந்தச் சிறுவன்தான் பிற்காலத்தில் ராமனுக்குத் தாசனாகவே ஆகி எல்லாராலும் வினயமுடன் பாபா ராமதாஸ் என அழைக்கப்பட்டான்.

விட்டலுக்குப் படிப்பில் அவ்வளவாக நாட்டம் செல்லவில்லை. ஆனால், நன்றாகப் பதிய வைத்துக்கொள்ளும் ஆற்றல் இருந்தது. நகைச்சுவை கலந்த தன் நாவன்மையால் மற்றவர்களை மயக்கித் தன்பால் ஈர்க்கும் சக்தியும் அவரிடம் இருந்தது! சிறு வயதிலிருந்தே பக்தி மார்க்கத்தில் மனதைப் பறிகொடுத்து, எப்போதும் ராம், ராம் என்று உச்சரித்தபடியே வேதாந்தத்தில் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். காலப்போக்கில் மும்பையில் நெசவுத் தொழில் படிப்பில் பட்டம் பெற்று, கர்நாடகம் குல்பர்க்காவில் நூற்பாலை ஒன்றில் ஸ்பின்னிங் மாஸ்டராகப் பணியில் அமர்ந்தார். கையிலுள்ள காசையெல்லாம் பிறருக்கே அளித்து வள்ளலாகவே திகழ்ந்தார். 1908-ஆம் ஆண்டு திருமணம் நடந்து, ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகியும் இல்லறத்தில் மனம் லயிக்காமல், தாமரை இலைத் தண்ணீர் போலவே இருந்தார். தன் தகப்பனாரிடமே, ஓம் ஸ்ரீராம், ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம் என்ற மந்திர உபதேசம் பெற்றுக் கொண்டார். அதன் பின் ஊர் ஊராகத் திரியும் தேசாந்திரியாகி, உலகை ராமனின் உருவாகவே உருவகப்படுத்தி, எல்லோருக்கும் ராமனின் அருமைப் பெருமைகளைப் பற்றி உபதேசிக்கலானார்.

அனைவரும் அவரை மரியாதையுடன் பாபா என்றும், ராமனின் தாசர் என்று பொருள்படும்படி ராமதாஸ் எனவும் அழைக்கலாயினர். 1922-ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் பகவான் ரமண மகரிஷியைச் சந்தித்து அருள் பெற்றதும், அவரது வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. முதன் முதலாக, இவ்வுலக பந்தங்களிலிருந்து விலகி, அருணாசலத்தில் உள்ள குகை ஒன்றில் 21 நாட்கள் தியானத்தில் ஆழ்ந்தார். அதிலிருந்து மீண்டெழுந்த வந்தவர், எல்லாமே ராமன்தான். அவனைத் தவிர வேறு ஒன்றும் இல்லை! என்று உணர்ந்தார். அவரது பெருமை வெளி உலகத்துக்குத் தெரிய வந்தது ஒரு சிறு சம்பவம் மூலமாகத்தான். ஒரு முறை பாபா நகரத்துக்கு வெளியில் உள்ள ஒரு மலைக் குகையில் இருக்க நேர்ந்தது. அதை அறிந்த ஊர்மக்கள் அவரது அருள் பெறுவதற்காக வரத் தொடங்கினர். அங்கு தினமும் நடக்கும் சத் சங்கத்தில் பங்கேற்கத் தொடங்கினர். ராமனின் பெருமைகளைப் பற்றிக் கூறும் அவரது உபன்யாசங்கள் அவர்களைப் பெரிதும் கவர்ந்தன. கரடுமுரடான அந்தக் குகையில் எவ்வித வசதியும் இன்றி அவர் இருப்பதைக் கண்ட பக்தர்கள், அவரது தேவைக்கு வேண்டிய கட்டில், மெத்தை, பாத்திரங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைக் கொண்டுவந்து குவித்தனர். அவற்றைப் பார்த்தும் பார்க்காமல் சலனமின்றி இருந்தார் பாபா.

விலை உயர்ந்த பல பொருட்கள் அந்தக் குகையில் இருப்பதை அறிந்து கொண்ட ஒரு திருடன், இரவில் தனியே தியானத்தில் இருக்கும் பாபாவை நெருங்கி, எல்லாப் பொருட்களையும் படுக்கை விரிப்பில் வைத்து முடிந்து கொடுக்கச் சொன்னான். அவரும் சிரித்தவாறே, அவன் கூறியபடி செய்தார். ஒரு கையில் கட்டிலைத் தூக்கிக் கொண்டு, துணி மூட்டையை மற்றொரு கையில் ஏந்தியவாறு வெளியேறினான். பாபாவும் கவலை ஏதுமின்றி மறுபடியும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். மறுநாள் காலை குகைக்கு வந்த பக்தர்கள் திடுக்கிட்டனர். பாபாஜி! இங்கிருந்த பொருட்கள் எல்லாம் எங்கே போய்விட்டன சுவாமி? என அவர்கள் வினவ, அவரோ அமைதியாக, ராம் எடுத்துக்கொண்டு போய்விட்டான். இருப்பது ஒரே ஒரு ராமன்தான். கொடுத்தது எல்லாம் அவனே... அவற்றை எடுத்துப் போனவனும் ராமனே! என்று கூறி வாய்விட்டுச் சிரிக்கலானார். அப்போதுதான் கூடி இருந்தோருக்கு சுவாமிஜியின் பெருமை புரிய ஆரம்பித்தது. ஒருவன் உலக பந்தங்களை அறவே துறந்து விட்டால், எப்படி அமைதியுடன் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடிகிறது என்பதைப் புரிந்து கொண்டனர். பக்தியில் திளைத்த மனமும், ஆழ்நிலை தியானத்தில் ஆழ்ந்த அமைதியும்தான் உண்மையான மன நிறைவை அளிக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லித் தன் பக்தர்களுக்குப் புரிய வைத்து விட்டார் பாபா ராமதாஸ்!

மற்றொரு சமயம், பவுர்ணமியன்று நாம ஜபம் செய்து கொண்டிருந்த ராமதாஸர் அருகில் கொடிய விஷமுடைய நாகம் ஒன்று வந்தது. அதைக் கண்டு மகான் பயம் கொள்ளாமல் இன்று ராமன் நாகருடைய உருவத்தில் வந்துள்ளார் என்று தன்னிடமிருந்த வெல்லத்தை அதற்கு சமர்ப்பித்து, ராமா ! இதை ஏற்றுக்கொள் என்றார். அந்த நாகம் என்ன நினைத்ததோ தெரியவில்லை. இரண்டு மூன்று முறை தன்னுடைய நாக்கை நீட்டி வெல்லத்தைத் தீண்டி விட்டு அவருடைய நாம கீர்த்தனத்தைக் கேட்டவாறே சிறிது நேரம் அங்கேயே படுத்திருந்தது. காலைப் பொழுது விடியும் சமயத்தில் தானாகவே வந்த வழியிலேயே போய்விட்டது. பாம்பு தீண்டிய அந்த வெல்லத்தை ராமதாஸர், ராமருடைய பிரசாதம் என்று வாயில் போட்டுக்கொண்டார். தொடர்ந்து ஆனந்தமாக நாம ஜபம் செய்து வந்தார். பொழுது விடிந்தபிறகு, ஊரில் உள்ளவர்கள் அனைவரும் இதைக் கண்டு அதிசயித்தனர். பக்தியின் மூலம் இறையுணர்வை மக்களுக்குப் போதித்து, அன்பைக் காட்டினால் நிச்சயம் உலகில் அமைதியும் சமாதானமும் தழைத்தோங்கும். இதற்கு உரிய முக்கிய சாதனம் பகவான் ராமனின் திருவடிகளைச் சரணடைவதே ஆகும்! என்கிறார் பாபா ராமதாஸ். பாபாஜியும் அவரது சிஷ்யை பூஜ்ய மாதாஜி கிருஷ்ணா பாயும் சேர்ந்து 1931-ல் ஆரம்பித்த ஆனந்தாச்ரமம் கீர்த்தியுடன் காசர்கோட்டில் உள்ள கஞ்சன்கோட்டில் இயங்கி வருகிறது. அவரது முக்கிய சீடர்களில் ஒருவர்தான் திருவண்ணாமலை மகான் - யோகி ராம்சுரத் குமார் ஆவார்! பாபா ராமதாஸ் 1963-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 2-ஆம் தேதி ஸித்தி அடைந்தார். அப்படிப்பட்ட ராம பக்த தாசரை நாமும் போற்றி வணங்குவோம்!

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar