பொங்கலூர்: காங்கேயம் படியூர், பொங்கலூர் கண்டியன்கோவில் ஆகிய இரண்டு கிராமங்களின் எல்லையில் உள்ள சடையம்பதி என்ற இடத்தில் முனியப்பசுவாமி கோவில் அமைந்துள்ளது. குன்றின் மேல் அமைந்துள்ளதால் அது கரட்டு முனியப்பசுவாமி என்று அழைக்கப்படுகிறது. அங்கு செல்வவிநாயகர், கரட்டு முனியப்பன், கன்னிமார், கருப்பணசுவாமி கோவில்கள் அமைந்துள்ளன. கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்ததன் முதலாம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி விநாயகர் பூஜை, 108 சங்காபிஷேகம், தீர்த்தம் அபிஷேகம், பூர்னாகுதி, மகா அபிஷேகம் ஆகியன நடந்தது. விபூதி பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரண்டு கிராமங்களின் எல்லையில் அமைந்து காவல் தெய்வமாக வழிபடப்படும் முனியப்ப சுவாமி இரண்டு கிராம மக்களின் ஒற்றுமைக்கு உதாரணமாக திகழ்கிறது.