பதிவு செய்த நாள்
07
செப்
2022
05:09
தஞ்சாவூர், தஞ்சாவூரில், பூம்புகார் கைவினைப்பொருள் விற்பனை நிலையில், நவராத்திரி கொலு பொம்மை கண்காட்சியில், கடவுள்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது போல, இடம்பெற்றுள்ள காட்சி பலரையும் கவர்ந்துள்ளது.
இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரிப் பண்டிகையையொட்டி, தஞ்சாவூர், பூம்புகார் விற்பனை நிலையத்தில், களிமண், காகிதக்கூழ், பளிங்குத்துாள், கருங்கல், ரேடியம், கொல்கத்தா களிமண் போன்ற பலவகை கைவினைப்பொருட்களினால் தயாரிக்கப்பட்ட பொம்மைகள் விற்பனை மற்றும் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில், நவராத்திரிக்கு தேவையான கொலுப்படி செட், கிரகப்பிரவேச செட், வேதமூர்த்திகள் அஷ்டதிக் பாலகர்கள், அஷ்ட பைரவர்கள், நவகிரகங்கள், அத்திவரதர் நின்ற கோலம், தசாவதாரம், அஷ்டலெட்சுமி, விநாயகர், குபேரன், திருமலை,கோபியர், தாபார், மைசூர் தசரா, சங்கீத மும்மூர்த்திகள், கருட சேவை, வைகுண்ட காட்சி, நவதுர்க்கை, பூதகணங்கள், கிருஷ்ணர் விளையாட்டு போன்ற செட் பொம்மைகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ராஜஸ்தான், கொல்கத்தா, புனே, புதுடெல்லி போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் வாங்கபட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பிரம்மா,வருணபகவான்,விநாயகர், சரஸ்வதி,லட்சமி,முருகன் உள்ளிட்ட கடவுள்கள் வயலில் நாற்று விடுவது, பயிர்களை பாரமரிப்பு, அறுவடை செய்வது, அறுவடை செய்த நெல்லை துாற்றி, மூட்டையாக மாட்டு வண்டியில் எடுத்து செல்வது போன்ற செயல்களை அரக்கர்களை மூலம் செய்யும் கொலு பொம்மைகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.