பதிவு செய்த நாள்
08
செப்
2022
07:09
சேலம்: சேலத்தில் நேற்று, ‘சிவ’ கோஷம் முழங்க, வெகு விமரிசையாக நடந்த, சுகவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் மாநகரின் அடையாளமாகவும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பிரசித்தி பெற்ற, சுகவனேஸ்வரர் கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா, வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக காலையில் விக்னேஷ்வர பூஜை, ஆறாம் கால பரிவார சுவாமிகளுக்கு யாக பூஜை, பரிவார கலசங்கள் புறப்பாடு, பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், ஆறாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி நடந்தது. இதையடுத்து யாத்ராதானம், அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்கள், மூலஸ்தான சுவாமி, அம்மன், விநாயகர், சுப்ரமணியர் கலசங்கள் மேள தாளம் முழங்க, யாகசாலையில் இருந்து கொண்டு வரப்பட்டன. காலை, 10:50 மணிக்கு, கோவிலை சுற்றி அலை கடலென பக்தர்கள் திரண்டிருக்க, அனைத்து விமானங்கள், ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகமும் தொடர்ந்து சுகவனேஸ்வரர் சுவாமி, ஸ்வர்ணாம்பிகை அம்மனுக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. சிவாச்சாரியார்கள், கலச தீர்த்தத்துக்கு பூக்கள் துாவி தீபாராதனை காட்டினர். அப்போது கோபுரங்கள், மூலவர் விமானங்களை கருடன் சுற்றி வந்ததால் பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.
புனித நீர் பக்தர்கள் மீது பீய்ச்சி அடிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் எழுப்பிய ‘சிவ’ கோஷம் விண்ணை முட்டியது. கட்டடங்கள், வீடுகளின் மீது நின்றும், ஏராளமானோர் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். மதியம் சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக விழாவால் ஆறு நாட்களுக்கு பிறகு, மூலவர் தரிசனத்துக்கு பக்தர்கள் நேற்று அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, யாக பூஜையில் பங்கேற்றார். கும்பாபிஷேகத்தின் போது, மூலவர் விமான பகுதியில் நின்றார். பின் சுவாமியை தரிசித்து சென்றார். அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கண்ணன், கலெக்டர் கார்மேகம், மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ், எம்.பி., பார்த்திபன், எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன், அருள், சேலம் மண்டல இணை கமிஷனர் மங்கையர்கரசி, கோவில் உதவி கமிஷனர் சரவணன், அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மூலவர், அம்மனுக்கு தங்க கவசம் சாத்துப்படி செய்யப்பட்டது. மாலையில் சுவாமிக்கு மேள தாளம் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. இரவு பஞ்சமூர்த்திகள் உலா நடந்தது. சேலம் மாநகர போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.