பதிவு செய்த நாள்
10
செப்
2022
08:09
பேரூர்: மாதம்பட்டியில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத திம்மராய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது. மாதம்பட்டி, பீட்பள்ளத்தின் அருகில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத திம்மராய பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த ஏழாம் தேதி, மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அன்று தீர்த்த குடம் முளைப்பாரி எடுத்துவரப்பட்டது. அதனைத்தொடர்ந்து, முதல் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு மங்கல இசை, திருப்பள்ளி எழுச்சியும், காலை, 9:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜையும், மாலை, 5:30 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், விஷ்ணு ஸகஸ்ர நாம பாராயணம், வேத பாராயணம், மூல மந்திர, மாலா மந்திர ஹோமங்கள் நடந்தது.
நேற்று காலை, 6:00 மணிக்கு, மங்கல இசை, திருப்பள்ளி எழுச்சியும், நான்காம் கால பூஜையும், வேத பாராயணம், காயத்திரி ஹோமங்கள், ஷன்னவாதி ஹோமங்கள் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, கடம் புறப்பட்டு, காலை, 10:00 மணிக்கு, ஸ்ரீ நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தலைமையில், விமான கலசங்கள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத திம்மராய பெருமாளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து, தச தரிசனம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில், பிள்ளையார் பீடம் பொன்மணிவாசக அடிகளார் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.