சீர்காழி தாராளன் கோவிலில் உதய தங்க கருட சேவை : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2022 08:09
மயிலாடுதுறை: சீர்காழி தாராளன் கோவிலில் உதய தங்க கருட சேவை மற்றும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காழி ஸ்ரீ ராம விண்ணகரம், ஸ்ரீ திரு விக்ரம பெருமாள் என்று அழைக்கப்படும் தாடாளன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசத் தலங்களில் 28 வது கோவிலாக இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்தில் பெருமாளை போற்றி திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்களை பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தகைய சிறப்பு மிக்க கோவிலின் பவித்திர உற்சவம் கடந்த 6ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜைக்கப்பட்ட பவித்திர மாலை பெருமாளுக்கு சாற்றப்பட்டு 8 கால யாக பூஜைகள் நடைபெற்றன. ஐந்தாம் நாள் காலை உதய தங்க கருட சேவையும், சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியும் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, தங்க கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருள, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சாற்று முறை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளையும், தாயாரையும் சேவித்தனர். பூஜைகளை பத்ரி பட்டாச்சாரியார் தலைமையிலானோர் செய்து வைத்தனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாத விநியோகம் நடைபெற்றது. உதய கருட சேவை மற்றும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி ஏற்பாடுகளை கோவில் ஆதீனம் கே.கே.சி.ஸ்ரீனிவாசாச்சாரியார் செய்திருந்தார்.