கோவில்பாளையம்: குரும்பபாளையம், பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கோவில்பாளையம் அருகே குரும்பபாளையத்தில் பிரசித்தி பெற்ற பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது.. இக்கோவில் வளாகத்தில், சித்தி விநாயகர் மற்றும் பாலமுருகன் சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 11ம் தேதி காலை கணபதி வழிபாடுடன் துவங்கியது. மாலையில் வேள்வி பூஜை நடந்தது. நேற்று அதிகாலையில், இரண்டாம் கால வேள்வி பூஜையும், காலை 9:30 மணிக்கு சித்தி விநாயகர், பாலமுருகன், பட்டத்தரசி அம்மன் மற்றும் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து தீபாராதனை நடந்தது. கோவை முன்னாள் எம்.பி., நாகராஜ், பேரூராட்சித் தலைவர் கோமளவள்ளி கந்தசாமி உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.