பதிவு செய்த நாள்
14
செப்
2022
09:09
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை கைலாசநாதர் கோவிலில், 700 ஆண்டுகளுக்கு முந்தைய கற்சிலையை, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: கறுப்பு நிறத்தில், 4.5 அடி உயரத்தில் கருங்கல்லால் செய்யப்பட்டுள்ள இச்சிலை, 13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவிலில் வைத்துள்ளனர். கோவில் இடிந்து, அங்குள்ள சிலைகள் காணாமல் போனநிலையில், இச்சிலையை மட்டும் மக்கள் பாதுகாத்து வழிபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே வழிபாட்டிலுள்ள பழமையான லிங்கமும், பார்வதி சிலையும் இங்குதான் உள்ளது. இக்கோவில், 700 ஆண்டுகளுக்கு முன்பு திருவத்தீஸ்வரமுடைய நாயனார் கோவில் என அழைக்கப்பட்டுள்ளது. பார்வதி சிலைக்கு பின்புறமுள்ள பிரபாவளியும், அதே கருங்கல்லால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையில் முன் வலது கை அபய ஹஸ்தத்தையும், இடது கை வரத முத்திரையையும் கொண்டுள்ளன. பின் கைகளில் பாச அங்குசங்கள் உள்ளன. இக்கருங்கல் சிற்பம் பார்ப்பதற்கு, ஒரு தேரிலுள்ள மரச்சிற்பம் போன்று மிகவும் நுட்பமாய் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். ஆய்வில், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், வரலாற்று ஆசிரியர் ரவி, ஆசிரியர் சன்னை பல்லப்பா ஆகியோர் பங்கேற்றனர்.