அன்னூர்: மொண்டிபாளையம் பெருமாள் கோவில் புரட்டாசி திருவிழா நாளை துவங்குகிறது. மேலத்திருப்பதி என்று அழைக்கப்படும் அன்னூர் அடுத்துள்ள மொண்டி பாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் 400 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில், புரட்டாசி திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவுக்கு வெளிமாவட்டம் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து பெருமாளை தரிசிப்பர். இக்கோவிலில் நாளை (17ம் தேதி) புரட்டாசி திருவிழா நடக்கிறது. அதிகாலை 5:00 மணிக்கு திருமஞ்சனமும், இதையடுத்து அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு கருட வாகனத்தில், வெங்கடேச பெருமாள் உலா வந்து அருள் பாலிக்கிறார். சனிக்கிழமையன்று கோவை, அன்னூர், மேட்டுப்பாளையம், அவிநாசி மற்றும் புளியம்பட்டியில் இருந்து மொண்டிபாளையத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. புரட்டாசி மாதத்தில் அன்னதானம் செய்ய விரும்புவோர் கோவில் நிர்வாகத்தை அணுகலாம். வேண்டுதலை நிறைவேற்ற கோவில் வளாகத்தில் துலாபாரம் நிறுவப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.