ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் இருவேளை மண்டல பூஜை: பக்தர்கள் புகார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2022 03:09
ஈரோடு: ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், இருவேளை மண்டல பூஜை நடப்பதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஈரோடு வாருணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த, 8ல் கும்பாபிஷேகம் நடந்தது. 48 நாட்கள் மண்டல பூஜை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டது. 9 முதல் மண்டல பூஜை நடக்கிறது. வழக்கமாக மாலை நேரத்தில் தான் கோவில்களில் மண்டல பூஜை நடத்தப்படும். இந்நிலையில் இக்கோவிலில் தினமும் காலை, மாலை என, இருவேளையும் மண்டல பூஜை தினமும் நடக்கிறது. இது கோவில் ஆகம விதிமுறைகளுக்கு எதிரானது. காலையில் சிவனடியார்களும், மாலையில் கோவில் நிர்வாகம் சார்பிலும் மண்டல பூஜை நடக்கிறது. இதனால் பக்தர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனை தடுத்து ஆகம விதிமுறைப்படி மண்டல பூஜை நடத்த வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் கயல்விழி கூறியதாவது: கோவில் சார்பில் தினமும் மாலை வேளையில் தான் மண்டல பூஜை நடக்கிறது. சிவனடியார்கள் தினமும் வழக்கம் போல் காலை வேளைகளில் தேவாரம், திருவாசகம் உள்ளிட்டவற்றை பாடி பூஜை செய்து வருகின்றனர். காலையில் மண்டல பூஜை செய்வதாக கூறியிருந்தால் அது தவறு. இதுகுறித்து புகார் ஏதும் வரவில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.