பதிவு செய்த நாள்
17
செப்
2022
06:09
சின்னமனுார் : சின்னமனுார் பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமியம்மன் கோயிலில் ரூ. ஒரு கோடி மதிப்பில் திருப்பணி துவங்கியது. இக்கோயில் புராதானமானதும், பிரசித்தி பெற்றதுமாகும். ஆண்டுதோறும் இக்கோயில் தேரோட்டம் இரு நாட்கள் நடைபெறும். கோயில் திருப்பணி,கும்பாபிஷேகம் 2007 ல் நடத்தது. அதன்பின் நடைபெறவில்லை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருப்பணி , கும்பாபிஷேகம் நடந்த வேண்டும் என்பது ஆகம விதி. பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று திருப்பணி, கும்பாபிேஷகத்திற்கு ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியது. தற்போது கோயில் திருப்பணிகள் துவங்கி உள்ளது. முன்னதாக தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, பழமை மாறாமல் திருப்பணி செய்ய அனுமதி வழங்கினர். பின்னர் ஸ்தபதி, மண்டல கமிட்டியின் பரிந்துரையில் உபயதாரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ரூ.ஒரு கோடி செலவில் திருப்பணி வேலைகள் துவங்கியுள்ளது.
செயல் அலுவலர் நதியா கூறியதாவது : திருப்பணிக்கென பாலாலயம் செய்யப்பட்டது. ராஜகோபுரம், அனைத்து விமானங்கள், சிவன் மற்றும் அம்மன் சன்னதி, மடப்பள்ளி, தட்டோடு பதித்தல், அபிஷேக நீர் வெளியேறும் வழி, சுற்றுச்சுவர், மின்வயரிங், குடிநீர் குழாய், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் ரூ. ஒரு கோடிக்கு செய்ய உபயதாரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது. வரும் தை அல்லது வைகாசியில் கும்பாபிஷேகம் நடைபெறும்" என்றார்.