பேரையூர் அருகே கி.பி 16ம் நுாற்றாண்டு வளரி வீரன் நடுகல் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2022 10:09
பேரையூர்: பேரையூர் அருகே டி.குண்ணத்துாரில் கி.பி. 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த வளரி வீரன் சிற்பம் கண்டறியப்பட்டது.மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரிமுதுகலை வரலாற்றுத்துறை தலைவரும்,பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமணமூர்த்தி, ஆய்வாளர் அனந்தகுமரன் இச்சிற்பத்தை கண்டறிந்தனர்.
முனீஸ்வரன் கூறியதாவது: இவ்வூர் பிற்கால பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் சிறு குன்றத்துார் என்றும், காலப்போக்கில் குண்ணத்துார் என்றும் அழைக்கப்பட்டது. இவ்வூரின் தெற்கே தேவன்குறிச்சி மலைப்பகுதியை பெருங்குன்றத்துார் என்றும், கலிங்கத் தரையர் பெயர் கொண்ட குறுநில மன்னர் ஆட்சி செய்ததாக கல்வெட்டு செய்தி சமீபத்தில் கண்டறியப்பட்டவை மற்றொரு சிறப்பு.கால்நடை திருடர்களை பிடிப்பதற்கும், போர்க்களத்தில் தப்பிப்பவர்களை உயிருடன் பிடிப்பதற்கும் வளரியை பயன்படுத்தினர். வளரியை வளைதடி, திகிரி, பாறாவளை, சுழல்படை, கள்ளர் தடி, படைவட்டம் என்று அழைத்தனர். இவ்வூரில் கண்டறியப்பட்ட நடுகல் 41 இன்ச் உயரம் 27 இன்ச் அகலம் கொண்டவை. மூன்று அடுக்கு கோபுரம் தோரணவாயில் வடிவில் கொண்டு கீழ்ப்பகுதியில் ஆண் மற்றும் இரண்டு பெண் சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளது.
இச்சிற்பம் வளரி வீரன் என்பதற்கு சான்றாக நடுப்பகுதியில் வீரன் கையில் ஈட்டியை பிடித்தவாறு இடது கையில் வளரியை பிடித்தவாறு வலது கால் சற்று சாய்ந்து முழங்கால் தெரியும் படியும் இறுகிய காலும் காலில் கழலும் கொண்டு சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தை வீரன் உருவம் விரிந்த மார்பு கையில் காப்பு நீண்ட காதும் தேய்ந்த முகத்துடன் காணப்படுகிறது. வளரி தன் கையில் ஏந்தி இருப்பதால் இச்சிற்பத்தை வளரி வீரன் சிற்பம் என்று அழைக்கப்படுகிறது.வீரன் வலதுபுறத்தில் பெண் சிற்பம் அணிகலன் அணிந்து அலங்காரத்துடன் சரிந்த கொண்டையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண் சிற்பம் வலது கையை தொடையில் வைத்து இடது கையை செண்டு ஏந்தி இருக்கிறாள். மற்றொரு பெண் சிற்பம் வீரன் இடது புறத்தில் இடது கையை தொடையில் வைத்து வலது கையை செண்டு உயர்த்தி பிடித்துள்ளார். இரண்டு பெண் சிற்பமும் ஆடை அலங்காரத்துடன் கொண்டை சரிந்து காணப்படுகிறது. இச்சிற்பத்தை பார்க்கும் போது வளரி வீரன் இறந்த பிறகு இருவரும் உடன்கட்டை ஏறியதற்கு சான்றாக அறிய முடிகிறது. இவ்வாறு கூறினார்.