பதிவு செய்த நாள்
25
செப்
2022
08:09
மதுரை: மகாளய அமாவாசையொட்டி, கடல், புண்ணிய நதிகள், நீர் நிலைகளில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி டி எஸ் கே மதுராந்தக நாச்சியார் அவர்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு நீண்ட வரிசையில் இருந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னையில், மெரினா, எலியட்ஸ் கடற்கரை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மாம்பலம், நங்கநல்லூர், திருவான்மியூர், வேளச்சேரி, தாம்பரம் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில், ஏராளமானோர் திரண்டு, முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். புரட்டாசி மகாளய அமாவாசை அன்று திதி பூஜை செய்தால், முன்னோர் ஆன்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை. மகாளய அமாவாசையான இன்று ராமேஸ்வரம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, திதி, தர்ப்பணம் செய்தனர். கோவிலுக்குள் உள்ள, 22 தீர்த்தங்களில் நீராடினர். கன்னியாகுமரியில் அதிகாலை முதல், பக்தர்கள் குவியத் துவங்கினர். அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரையில், புனித நீராடினர். பின், கடற்கரையில், முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, வழிபட்டனர். காலை முதலே, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.