புவனகிரி: கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே தலைக்குளம் கிராமத்தில் 81 அடி உயரமுள்ள பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மாதந்தோறும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். அதேபோல் புரட்டாசி மாத மகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. அம்பாளுக்கு மயானத்தில் யாகம் செய்யப்பட்டு கோவில் பூசாரி சிவகுமார் கத்தி மேல் ஏறி நின்று கையில் தீச்சட்டி ஏந்தி சுடலை காளியை சுற்றி வந்தார். பின்பு அலங்காரத்தில் இருந்த அம்பாளை கோயில் சுற்றி வளம் வந்து ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டது. ஊஞ்சலில் கையில் வீணை ஏந்தியபடி சரஸ்வதி கோலத்தில் உமையவள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பச்சைக்காளி, சிகப்பு காளி, அம்மன், குறத்தி வேடம் அணிந்தும் பக்தர்கள் முன்னிலையில் நடனமாடினர். வெக்காளியம்மனுக்கு பம்பை இசை முழங்க ஆராரோ ஆராரோ ஆரிரரோ தாலாட்டுப் பாடல்கள் பாடப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து விடிய விடிய கண்டு ரசித்தனர்.