பதிவு செய்த நாள்
01
அக்
2022
09:10
சென்னை, ": வடபழநி ஆண்டவர் கோவில் சக்தி கொலு விழாவின் ஐந்தாம் நாளான நேற்று, கெஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்பாள் அருள் பாலித்தார். வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், பிரதானமாக வீற்றுள்ள அம்பாளுக்கு தினசரி சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. சக்தி கொலு ஐந்தாம் நாள் விழாவை அர்ச்சகர்களின் மனைவியர் மற்றும் உபயதாரர்கள் இணைந்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
நேற்று, கெஜலட்சுமி அலங்காரத்தில், பக்தர்களுக்கு அம்பாள் அருள் பாலித்தார். முன்னதாக நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை லலிதா சகஸ்ரநா பாராயணம், வேத பாராயணம், ஸ்ரீ ருத்ரம், சமஹம், ஸ்ரீ சுக்தம் நடந்தது.பின், பக்தர்களின் கொலு பாட்டு நடந்தது. நேற்று இரவு, திருப்பூர் கிருஷ்ணனின் சொற்பொழிவு நடந்தது.இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சக்தி கொலு, நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நவராத்தரி பண்டிகை ஐந்தாம் நாளை முன்னிட்டு வேதவல்லி தாயார் சிம்ம வாகனத்தில் மாடவீதிகளை வலம் வந்து அருள்பாலித்தார்.
வேதவல்லி தாயாருக்கு தினசரி லட்சார்ச்சனையும், சிறப்பு அலங்கார வழிபாடும் நடக்கிறது.பூங்கா நகர்: கந்தசாமி கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஐந்தாம் நாளான நேற்று, திருவிளக்கு பூஜை நடந்தது.பக்தர்களுக்கு வள்ளி, தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.மணலி: மணலியில் உள்ள, பழமையான திருவுடைநாயகி சமேத திருவுடைநாதர் கோவிலில், நவராத்திரியின் ஐந்தாம் நாளான நேற்று மாலை, திருவுடைநாயகி மூலவர் தாயார், மகாலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
நவராத்திரி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் நடந்த சிறப்பு விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, நவராத்திரி திருவிழா நான்காம் நாளில், உற்சவ தாயார் கவுரி அலங்காரத்தில் நாக வாகனத்தில் எழுந்தருளி மாட வீதி உலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.