மானாமதுரை மேலபசலை அருகே மிக பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2022 02:10
மானாமதுரை: மானாமதுரை மேலபசலை அருகே மிகப் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டு பக்தர்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிற நிலையில் இப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை-ராமேஸ்வரம் 4 வழிச்சாலையில் மானாமதுரை மேலபசலை அருகே கிழக்கு திசையை நோக்கி மிகப்பெரிய சிவலிங்கம் ஒன்று உள்ளது.அதன் அருகில் கருங்கல் பீடமும் அதில் சிவபெருமானின் வாகனமான காளை உருவமும் சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் வளர்ந்திருந்த கருவேல மரங்களை அகற்றிய போது இந்த சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.இதனை இந்த வழியாக சென்ற சிவ பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் பார்த்து மாதந்தோறும் பிரதோஷம் மற்றும் விசேஷ நாட்களில் வந்து வழிபாடு செய்கின்றனர்.இது குறித்து சிவனடியார்கள் மற்றும் ராஜபாண்டி என்பவர் கூறுகையில், முந்தைய காலங்களில் பக்தர்கள் காசி மற்றும் ராமேஸ்வரத்திற்கு பாதயாத்திரையாக செல்லும் போது செல்லும் வழிகளில் சிவ வழிபாடு செய்வதற்காக மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வரையிலும் வழிநெடுகிலும் ஆங்காங்கே சிறிய அளவிலான சிவன் கோயில்கள் மற்றும் பக்தர்கள் தங்குவதற்காக மடங்கள் சத்திரங்களை அப்போதைய மன்னர்கள் கட்டியுள்ளனர். தற்போது கூட மதுரை ராமேஸ்வரம் சாலையில் பீசர்பட்டணம் என்ற இடத்தில் சிவலிங்கத்துடன் மடம் உள்ளது. அதேபோல் இந்த மேலபசலை பகுதியிலும் சிவாலயம் இருந்ததற்கான அடையாளம் உள்ளது, காலமாற்றத்தால் அவை தற்போது இடிந்து மண்ணுக்குள் புதையுண்டு இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. தற்போது இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள லிங்கம் மிக பழமையான லிங்கமாக இருப்பதினால் இப்பகுதியை சுற்றி கோயில்கள் மற்றும் ஏராளமான வரலாற்று சுவடுகள் இருப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளன.ஆகவே தொல்லியல் துறை அதிகாரிகள் இப்பகுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும் என்றனர்.