பதிவு செய்த நாள்
01
அக்
2022
09:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மலை உச்சிக்கு சென்று, அண்ணாமலையார் பாதத்திற்கு பூஜை செய்த ஆட்டோ டிரைவருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள, 2,668 அடி உயர மலை உச்சியில் கார்த்திகை தீப திருவிழாவின் போது, மகா தீபம் ஏற்றப்படும். மலையில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்தால் அரிய வகை மூலிகை மரங்கள் எரிவதை தடுக்கும் வகையில் மலை மீது பக்தர்கள் ஏற வனத்துறை தடை விதித்துள்ளது. மகா தீபத்தின் போது குறைந்தளவு பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். இந்நிலையில், மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு, சிறப்பு பூஜை செய்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது. இதில் மலையின் மீதுள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு பூக்கள், பழங்கள் மற்றும் நாணயங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் விசாரித்ததில், திருவண்ணாமலை, கோபுரம் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன், 30, என்பதும், அவர், திருவண்ணாமலையில் சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.