பதிவு செய்த நாள்
22
ஆக
2012
11:08
நாகர்கோவில்: ஆவணி அத்தம் நட்சத்திரம் பிறந்ததை ஒட்டி, கன்னியாகுமரி மாவட்டம் பத்மனாபபுரம் அரண்மனையில், ஓணம் கொண்டாட்டம் தொடங்கியது. இந்தியாவில் கொண்டாடப்படும் ஊழவர் திருநாள்களில் ஒன்று ஓணம். கேரள மக்கள் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றனர். வாமன அவதாரம் எடுத்த விஷ்ணு, மன்னர் மகாபலியிடம் மூன்று அடி நிலம் கேட்டார். தருகிறேன் என்று மகாபலி சொன்னதும், விஸ்வரூபம் எடுத்த வாமனர், முதல் அடியில் பூமி, இரண்டாவது அடியில் ஆகாயத்தை அளந்து, மூன்றாவது அடிக்கு நிலம் கேட்ட போது தனது தலையை கொடுத்தார் மகாபலி. விஷ்ணுவிடம் பெற்ற வரத்தின் படி, ஆவணி திருவோண நாளில் மக்களை மகாபலி காண வருவதாக நம்பப்படுகிறது. அத்தம் நாளில் தொடங்கி பத்து நாட்கள் இந்த கொண்டாட்டம் நடக்கிறது. அத்தம் பிறந்தை ஒட்டி பத்மனாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ கோலம் அமைத்து, ஊஞ்சல் ஆடியும், பாட்டு பாடியும் ஓணம் கொண்டாட்டம் தொடங்கியது. இனி வரும் நாட்கள் கேரளாவிலும், அதனை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களிலும், சென்னையிலும் இனி ஓணம் களை கட்டுவதை காண முடியும். ஆக.,29 தேதி திருவோணம் கொண்டாடப்படுகிறது.