பதிவு செய்த நாள்
07
அக்
2022
02:10
திருநெல்வேலி: திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் நேற்று மாலை காப்பு களைந்து விரதத்தை நிறைவு செய்தனர்.
கர்நாடக மாநிலம் மைசூரில் நடக்கும் நவராத்திரி தசரா விழாவைப் போல தமிழகத்தின் தென்கோடியில் திருநெல்வேலி, பாளை, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடக்கும் தசரா விழா பிரசித்தி பெற்றதாகும். குலசேகரபட்டினத்தில் கடந்த 26ம் தேதி காலை தசரா விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அபிசேக, ஆராதனைகளுடன் இரவில் வீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் இரவு குலசேகரப்பட்டினம் கடற்கரையில் சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பு மகிஷா சூரசம்ஹாரம் நடந்தது. சிங்கமுகன், எருமை, சேவல் முகங்களில் வந்த சூரனை அம்மன் வதம் செய்தார். பின்னர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அபிசேக ஆராதனை நடந்தது. நேற்று காலையில் பூஞ்சப்பரத்தில் அம்மன் வீதியுலா வந்தார். மாலை 4:00 மணிக்கு சப்பரம் கோயில் வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் காப்புகளை அவிழ்த்து, வேடம் கலைந்து, விரதத்தை நிறைவு செய்தனர். திருநெல்வேலி, பாளையில் நடக்கும் தசரா விழாவில் முத்தாரம்மன், உச்சினிமாகாளியம்மன், உலகம்மன் என 12 சப்பரங்கள் வீதி உலா வந்தன. நேற்று காலை ராமசாமி கோயில் முன்பும் மாலையில் கோபாலசாமி கோவில் முன்பும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பாளை., மார்க்கெட் அருகே எருமை கிடா மைதானத்தில் சூரசம்காரம் நடந்தது. அதேபோல திருநெல்வேலி டவுனில் உள்ள பல்வேறு 34 அம்மன் கோயில்களில் இருந்து சப்பரங்கள் எடுத்துவரப்பட்டு சக்தி தரிசனம் நடந்தது. தென்மாவட்டங்களில் நடந்த நவராத்திரி தசரா விழா நேற்று இரவு உடன் நிறைவு பெற்றது.