ராமேஸ்வரம் கோயிலில் பசுமாடு தானம் : பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2022 10:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு பசு மாடுகள் தானமாக கொடுக்கும் பக்தர்கள், மருத்துவ சான்று கிடைக்காமல் வேதனை அடைகின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் பசு மாடுகள், கன்று குட்டிகளை தானமாக வழங்கி நேர்த்தி கடனை செலுத்துகின்றனர். இந்த பசு மாடு ஆரோக்கியத்துடன் உள்ளதா என கால்நடை மருத்துவரின் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கோயில் அதிகாரிகள் தானமாக பெற்று கொள்வார்கள். இது தவிர பசு மாடு உரிமையாளர், அதனருகில் நின்றபடி புகைப்படம் எடுத்து கொடுக்க வேண்டும். இது தெரியாத பக்தர்கள், வெளியூரில் இருந்து சில ஆயிரம் செலவிட்டு வாகனத்தில் பசு மாடு, கன்று குட்டியை ஏற்றி நேராக கோயில் அலுவலகத்திற்கு வருகின்றனர். இங்கு அதிகாரிகள் சான்று கேட்டதும் விழி பிதுங்கி நிற்கின்றனர். பின்னர் ராமேஸ்வரம் கால்நடை மருத்துவமனைக்கு சென்றால், மருத்துவர் இன்றி மூடி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். இதனால் பசு, கன்று குட்டியை என்ன செய்வது என தெரியாமல், மீண்டும் வாகனத்தில் சொந்த ஊருக்கு ஏற்றி செல்வதால், நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் பக்தர்கள் வேதனை அடைகின்றனர். எனவே ராமேஸ்வரத்தில் நிரந்தரமாக கால்நடை மருத்துவரை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.