ஆண்டாள் கோயில் தங்க விமானத்தை சுற்றிய ட்ரோன்; போலீசார் விசாரணை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2022 07:10
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ராஜகோபுரம் மற்றும் தங்க விமானத்தை சுற்றிய ட்ரோன் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 108 வைணவ தலங்களில் மிகவும் முக்கியமானது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில். தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபுரத்தை கொண்டுள்ள கோயிலாகும். ஆண்டாள் சன்னதியில் 76 கிலோ தங்கத்தில் விமானத்திற்கு தங்கத்தகடுகள் பதிக்கப்பட்டு 2016 ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, தற்போது தங்க விமான கோபுரமாக காணப்படுகிறது.
இதனால் கோபுரம், கோயில் வளாகத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தங்க விமானத்தை பாதுகாக்கும் பொருட்டு கோயிலின் மேல் தளத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில் நிர்வாகம் மற்றும் போலீஸ் அனுமதி இல்லாமல் மேல் தளத்திற்கு சென்று தங்க விமானத்தை தரிசிக்க முடியாது. இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை 5:45 மணிக்கு ஒரு ட்ரோன் கோயில் மேல்பகுதி, ராஜகோபுரம், தங்க விமானத்தை சில நிமிடங்கள் சுற்றி வந்துள்ளது. இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக உஷாரடைந்து தேடினர். அதற்குள் ட்ரோன் திரும்பி சென்றுள்ளது. இதனையடுத்து எங்கிருந்து இந்த ட்ரோன் இயக்கப்பட்டது என்பது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் போலீசார் விசாரித்து வருகின்றனர்.