பதிவு செய்த நாள்
27
அக்
2022
09:10
அவிநாசி: சேவூர்,வாலீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா. கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் வைப்பு தலமாகவும், நடுச்சிதம்பரம் என போற்றப்படும் பாடல் பெற்ற தலமாகவும், சேவூர் அறம் வளர்ந்த நாயகி உடனமர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோவில் விளங்குகிறது.
இக்கோவிலில் சோமஸ்கந்தராய் அருள்பாலிக்கும் ஸ்ரீ கல்யாண சுப்ரமணிய சுவாமிக்கு நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கி வருகின்ற 31-ம் தேதி திங்கள்கிழமை வரை கந்தர் சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது.இதனையடுத்து தினசரி கோவிலில் காலை 10 மணிக்கு சத்ரு சம்ஹார ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகளும், மகா தீபாரதனையும் நடைபெறுகிறது. ஞாயிறன்று, மாலையில் முருகர் அன்னையிடம் சக்திவேல் வாங்கி, சிறப்பு அலங்கரத்தில் எழுந்தருளி சூரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சியாக சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து சேவூர் ராஜவீதி, கோபி சாலை, வடக்கு வீதி ஆகிய முக்கிய வீதிகளின் வழியாக சுவாமி திருவீதி உலா வந்து கஜமுகன், சிங்கம், பானுகோபாலன், வேணுகோபாலன் ஆகிய சூரர்களை தலையை வாங்கி வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனையடுத்து 31ம் தேதி காலையில் தெய்வானை திருக்கல்யாணம், மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினரும் ஊர் பொதுமக்களும் செய்துள்ளனர்.