பதிவு செய்த நாள்
30
அக்
2022
12:10
பல்லடம்: பல்லடம் பகுதியில் முருகன் கோவில்களில், சூரசம்ஹார நிகழ்வுடன் கந்த சஷ்டி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
முருகப்பெருமான் சூரனை வதம் செய்ததன் நினைவாக, கந்த சஷ்டி எனப்படும் சூரசம்ஹார விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், முருகன் கோவில்களில் இன்று, கந்த சஷ்டி விழா நடைபெற உள்ளது. பல்லடம் அடுத்த மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கந்த சஷ்டியை முன்னிட்டு, கடந்த, 25ம் தேதி நூற்றுக்கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை துவக்கினர். தினசரி, சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகின்றன. இன்று, காலை, 8 மணிக்கு விநாயகர் அம்மையப்பருக்கு அபிஷேகத்துடன் நிகழ்ச்சி துவங்குகிறது. இதையடுத்து, மஹா வேள்வி, அலங்காரம் ஆகியவற்றை தொடர்ந்து, மாலை, 6 மணிக்கு மேல் மரகதாம்பிகை அம்மையிடம் வெற்றிவேல் வெற்றிவேல் பெறும் நிகழ்வு நடைபெறும். தொடர்ந்து, 6.30 மணிக்கு மேல் சூரணை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் ஜரூராக நடந்து வருகிறது. நாளை, திருக்கல்யாண நிகழ்வுடன் விழா நிறைவு பெறுகிறது. இதேபோல், பல்லடம் விநாயகர் தண்டாயுதபாணி கோவிலிலும் கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட உள்ளது.