மூணாறு: மூணாறில் சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது.
இந்த கோயிலில் பழநி தண்டாயுதபாணி கோயிலில் நடக்கும் பூஜை உள்ளிட்ட ஐதீகங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கந்த சஷ்டி விழா அக்.25 ல் துவங்கியது. முருகனுக்கு தினமும் தீபாரதனை, அபிஷேகம் உள்பட பூஜைகள் நடந்தன. நேற்று திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள கார்த்திகை மஹாலில் பல வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் முருகன் மணக்கோலத்தில் எளுந்தருளினார். பக்தர்களின் சீர்வரிசையுடன் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. மந்திரங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது. கோயில் அர்ச்சகர் சங்கரநாராயண சர்மா வள்ளி, தெய்வானைக்கு மாங்கல்யம் சார்த்தினார். அதனையொட்டி வான வேடிக்கையும், அன்னதானமும் நடந்தது.