திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், அக். 26ம் தேதி, கந்த சஷ்டி விழா துவங்கியது. கொரோனா தொற்று காரணமாக இரு ஆண்டுகளுக்கு பின் காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப் பெருமானுக்கு லட்சார்ச்சனை நடத்தப்பட்டது. சஷ்டி விழாவை ஒட்டி ஆறு நாட்களும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் உற்சவர் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
அதே நேரத்தில், பக்தர்கள் தரிசனத்திற்கு காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப் பெருமானுக்கு லட்சார்ச்சனை நடந்தது. விழாவின் ஆறாவது நாளான நேற்று முன்தினம் உற்சவருக்கு சண்முகருக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று, காலை 10:00 மணிக்கு உற்சவ பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, திருக்கல்யாணம் நிகழ்ச்சியை கண்டு உற்சவர் சண்முகப் பெருமானை தரிசித்தனர். திருக்கல்யாணம் தொடர்ந்து பெண்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், மஞ்சள் குங்குமம், தாலி வழங்கப்பட்டது. மேலும், முருகன் மலைக்கோவிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் பொது வழி மற்றும் 100 ரூபாய் சிறப்பு தரிசனம் டிக்கெட் பெற்று பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருக்கல்யாணம் நிகழ்ச்சியில், துணை ஆணையர் விஜயா உட்பட பலர் பங்கேற்றனர்.