சபரிமலை நடை நாளை மாலை திறப்பு : 17ல் அதிகாலை மண்டல காலம் தொடக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2022 07:11
சபரிமலை: சபரிமலை நடை நாளை மாலை திறக்கிறது.. நாளை மறுநாள் அதிகாலை மண்டல காலம் ஆரம்பமாகிறது. நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் சபரிமலை முழுமையான சீசனை எதிர்கொள்ள தயாராக உள்ளது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் நடைபெறும் பூஜை மண்டலகாலம் ஆகும்.
இந்த ஆண்டு சீசனுக்காக நாளை மாலை 5:00 மணிக்கு நடை திறக்கிறது. மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அதை தொடர்ந்து 18-ம் படிகள் வழியாக வந்து ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்த பின்னர் புதிய மேல்சாந்திகள் சபரிமலை ஜெரயாமன்நம்பூதிரி, மாளிகைப்புறம் ஹரிகரன் நம்பூதிரி ஆகியோரை அழைத்து ஸ்ரீகோயில் முன்புறம் வந்ததும் அவர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்குவார். பின்னர் மாலை 6:00 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு இவர்களுக்கு அபிேஷகம் நடத்தி முறைப்படி ஸ்ரீகோயிலுக்குள் அழைத்து செல்வார்.வேறு பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 17-ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து விளக்கில் தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் ஆரம்பமாகும். தொடர்ந்து நெய்யபிேஷகம் உள்ளிட்ட பூஜைகள் தொடங்கும். டிச., 27-ம் தேதி மண்டலபூஜை நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் நடத்த வசதி செய்யப்பட்டுள்ளது. சபரிமலை பாதையில் 13 இடங்களில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் போட்டோ,ஆதார், வாக்காளர் அடையாள அட்டையில் ஏதாவது ஒன்று வைத்திருக்க வேண்டும். கடந்த ஒரு வாரமாக பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் பம்பையில் முகாமிட்டு செய்யப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்தனர். மழை சேதம், பெண்கள் சபரிமலை வரலாம் என்ற உத்தரவால் ஏற்பட்ட பதற்றம், கொரோனா போன்ற காரணங்களால் கடந்த நான்கு ஆண்டுகளாக முழுமையான சீசன் நடைபெறவில்லை. இந்த ஆண்டு அதிக அளவி்ல் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.