பதிவு செய்த நாள்
18
நவ
2022
08:11
மடிப்பாக்கம், மடிப்பாக்கத்தில் பதினெட்டு படியுடன் கூடிய அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு 45ம் ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு சுத்தி கலசம், சுவாமிக்கு புஷ்ப அபிஷேம், படி பூஜை நடந்தது.
காலை 9:00 மணிக்கு கொடியேற்றப்பட்டு, இரவு புஷ்ப அலங்காரமும், படி பூஜையும் நடந்தது. வரும் 21ல், மதியம் 1:30 மணிக்கு உத்சவ பலி, மாலை 6:30 மணிக்கு அய்யப்ப சுவாமி வீதி புறப்பாடு நடக்கிறது. வரும் 25ல் இரவு 11:00 மணிக்கு பள்ளிவேட்டையும், 26ல் காலை 7:00 மணிக்கு பள்ளியெழுச்சியும், மாலை 5:00 மணிக்கு ஆராட்டும் நடக்கின்றன. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. வரும் 30ம் தேதி காலை 9:00 மணிக்கு சஹஸ்ர சங்காபிஷேகம் நடக்கிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, தினமும் மாலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை பக்தி இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பிரம்மோற்சவம் நடக்கும், 26ம் தேதி, உற்சவர் அய்யப்ப சுவாமி மடிப்பாக்கத்தின் பல பகுதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
விரதம் துவங்கிய பக்தர்கள்: கார்த்திகை மாதம் நேற்று பிறந்ததை ஒட்டி, சென்னை, புறநகரில் உள்ள அய்யப்பன் கோவில்களில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மகாலிங்கபுரம், ராஜா அண்ணாமலைபுரம், அண்ணா நகர், மடிப்பாக்கம், நங்கநல்லுார் உள்ளிட்ட அய்யப்பன் கோவிலில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து, வரிசையில் நின்று குருசாமியிடம் மாலை அணிந்து, விரதத்தை துவக்கினர்.முன்னதாக, மாலை போடும் பக்தர்கள் துளசிமணி, சந்தன மாலைகள், கருப்பு, நீலம், காவி வேட்டிகளையும் ஆர்வத்துடன் வாங்கினர்.கார்த்திக்கை மாதத்தை முன்னிட்டு, அனைத்து அய்யப்பன் கோவில்களிலும் தினசரி பூஜை, விளக்கு பூஜை, லட்சார்ச்சனை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.