முருகப்பெருமானின் அடியவர்களில் அருணகிரிநாதர் குறிப்பிடத்தக்கவர். இளமையில் பெண்களை விரும்பியதால், நோயால் பாதிக்கப்பட்டார். மனம்வருந்தி, திருவண்ணாமலை வல்லாள மகாராஜன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். முருகனே நேரில் வந்து காப்பாற்றி ஆட்கொண்டார். இந்த முருகன் கம்பத்து இளையனார் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். முருகப்பெருமானின் அருளால் திருப்புகழ் பாடத் துவங்கினார். அவருடைய காலத்தில் திருவண்ணாமலையை ஆட்சி செய்தவன் பிரபுடதேவராயன். அரசவையில் சம்பந்தாண்டான் என்பவன் கவிஞனாக இருந்தான். ஒருமுறை மன்னன் முன்னிலையில் சம்பந்தாண்டானுக்கும், அருணகிரி நாதருக்கும் சொற்போட்டி நிகழ்ந்தது. முருகனை அங்கே வர வழைக்க முடியுமா? என சம்பந்தாண்டான் கேட்டான். உடனே அதலசேடனாராட என்ற பாடலை அருணகிரியார் பாடத்தொடங்கினார். முருகனை அந்த இடத்திற்கு வரும்படி அழைத்தார். அப்போது மயிலில் முருகன் எழுந்தருளினார். அனைவரும் ஆச்சரிய மடைந்ததுடன் முருகனின் அருள் தரிசனமும் பெற்றனர்.