ஏற்கனவே 59முறை கல்யாணம் பண்ணிக்கிட்டு 60வது வயது பூர்த்தி கல்யாணம் பண்ணிக்கிறதா நினைச்சுடாதீங்க. 60வயது பூர்த்தி கல்யாணம் என்று சொல்ல வேண்டும். தமிழ் வருடக்கணக்கின்படி நாம் பிறந்த வருடம், பிறந்த மாதம், பிறந்த நட்சத்திரம் இவை மூன்றும் இணையும் நாளை வாழ்க்கையில் இரண்டாவது முறையாகப் பார்ப்பது அறுபது வயது பூர்த்தியாகும் போது தான். தமிழ் வருடங்கள் அறுபது. இந்த அறுபது வருடங்களையும் கடந்து வந்ததில் எவ்வளவு சாதனைகள் எவ்வளவு வேதனைகள்! இவற்றையெல்லாம் கடந்து குடும்பவாழ்வு, பொதுவாழ்வு என எல்லாவற்றிலும் வெற்றி பெற்றிருப்பதைக் கொண்டாடும் வகையில் இதை நடத்துகிறார்கள். இக்காலத்தில் உறுதுணையாக இருந்த அறுபது வருடங்களின் தேவதைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் யாகம் நடத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, நமது சுகதுக்கங்களில் பங்கு கொண்டு நமக்காகவே வாழ்ந்து வரும் மனைவியின் கழுத்தில் தாலி கட்டி மீண்டும் புது வாழ்க்கையைத் துவங்கும் விதமாக சஷ்டியப்தபூர்த்தி என்னும் அறுபது வயது பூர்த்திகல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.