பதிவு செய்த நாள்
20
நவ
2022
10:11
தஞ்சாவூர், ஆடுதுறை மருத்துவக்குடி விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு விமான கலசங்களுக்கு பூஜிக்கப்பட்ட 45 புண்ணிய தீர்த்தங்கள் ஊற்றி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை மருத்துவக்குடி பஞ்சாங்கம் உருவாக்கப்பட்ட பிரசித்தி பெற்ற கிராமம். இங்கு, 400 ஆண்டுகள் பழமையான விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் கடந்த 1938ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தற்போது 84 ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாரம்பரிய முறையில் திருப்பணி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று 4ம் கால யாக சாலை பூஜையிடன், சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட கங்கை,யமுனை,காவிரி உள்ளிட்ட புண்ணிய நதிகள் இருந்து கொண்டு வரப்பட்ட 45 புனித தீர்த்த கலசங்களை சிவவாத்தியம் முழங்க வான வேடிக்கையுடன் கோவில் விமானங்களுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முகர், நந்திகேஸ்வரர் விமான கலசங்களுக்கு திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது வானில் கருடன் வட்டமிட்டது. ஹரஹர மகாதேவா என வான் அதிர பக்தர்கள் பக்தி கோஷமிட்டனர். தொடர்ந்து மூலவர் சன்னதிகளில் சிறப்பு மகா அபிஷேகம் நடந்தது. முன்னதாக கோபூஜை, ரிஷப பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை, லட்சுமி பூஜை நடந்தது. கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சமஸ்தான் ஸ்தாபகர் பிரம்ம ஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ், சென்னை நங்கநல்லூர் பிரம்மஸ்ரீ ரமணி அண்ணா, திருப்பனந்தாள் காசி திருமடம் இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், கும்பகோணம் திருவடிக்குடில் சுவாமிகள், திருப்பணி கமிட்டி தலைவர் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின், அரசு தலைமை கொறடா செழியன், மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம், ஹிந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை கமிஷனர் மோகனசுந்தரம், கும்பகோணம் உதவி கமிஷனர் சாந்தா சாந்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.