பதிவு செய்த நாள்
21
நவ
2022
08:11
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் ஆன்மீக மரபு மீறி நடையை இரும்பு தடுப்பு வேலியால் கோவில் நிர்வாகம் மூடியதால், பக்தர்கள் அவதிப்பட்டனர்.
விடுமுறை நாளாக நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். இக்கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு ரூ.100, 200 கட்டணமும், இலவச தரிசன வழியும் உள்ளது. இந்நிலையில் நேற்று பக்தர்கள் கூட்ட நெரிசலை சமாளிக்க என்பதற்காக, கட்டண வழியில் தரிசனம் செய்ய முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கோயில் மைய மண்டபத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செல்லும் முக்கிய நடையில் கோயில் நிர்வாகம் இரும்பு கம்பியில் தடுப்பு வேலி அமைத்து மூடினர். இதனால் கட்டணம், இலவச தரிசன வழியில் மற்றும் சுவாமி பிரகாரத்தை சுற்றிவர முடியாமல் பக்தர்கள் திக்கு முக்காடி, தடுப்பு வேலி முன் குவிந்தனர். இதனால், பக்தருக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோயில் நடை சாத்துவது போல், பக்தர்கள் செல்லும் பிரதான நடையை தடுப்பு வேலியில் மூடிய செயல், ஆன்மிக மரபை மீறியதாகும். இதனை கண்டித்து பக்தர்கள் பிரகாரத்தை வலம் வர, தடுப்பு வேலியை அகற்ற கோரி அ.தி.மு.க., கம்யூ., காங்., நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் பக்தர்கள் தடுப்பு வேலி முன் அமர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். பின் போலீசார் சமரசம் செய்து தடுப்பு வேலியை அகற்றினர். இச்சம்பவத்தால் 3 மணி நேரம் பக்தர்கள் கோயில் மைய மண்டபத்தில் காத்திருந்து அவதிப்பட்டனர்.