பதிவு செய்த நாள்
21
நவ
2022
08:11
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம் உட்பட, அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, முருகப்பெருமானை தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று வார விடுமுறையான ஞாயிறு மற்றும் கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு என்பதால், வழக்கத்திற்கு மாறாக, காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். பொதுவழியில், பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்வதற்கு, நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. அதே போல், நுாறு ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், இரண்டரை மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர். நேற்று, காத்திகை மாதம் முதல் ஞாயிறு என்பதால், மூலவருக்கு அதிகாலை 4:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், தங்கக்கிரீடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. மூலவரை தரிசிக்க, வரிசையில் நின்ற பக்தர்களுக்கு, குடிநீர் வசதியை கோவில் நிர்வாகம் ஏற்படுத்தி தராததால், சிரமப்பட்டனர். இதுதவிர, போதிய போலீஸ் பாதுகாப்பு மற்றும் கோவில் ஊழியர்கள் பக்தர்களை ஒழுங்குபடுத்தி அனுப்பாததால், கூட்ட நெரிசலில் பெரும்பாலான பக்தர்கள், மூலவரை சரியாக தரிசிக்க முடியாமல், ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.