பதிவு செய்த நாள்
21
நவ
2022
04:11
காரைக்குடி: சாக்கோட்டை அருகே சிலை எடுப்பு விழாவை முன்னிட்டு கிராம மக்கள், காவல் தெய்வங்களின் சிலைகளை கோலாகலமாக எடுத்துச் சென்றார்.
காரைக்குடி, மாத்தூர், பெரியகோட்டை சுதந்திரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாரம்பரியமாக கோயில்களுக்கு சிலை செய்து கொடுக்கும் சிற்பக்கூடங்கள் உள்ளன. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் சிலைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் மாஞ்சாள் விடுதி கிராமத்தில் கட்டப்பட்ட கோயிலுக்கு, புதுவயல் அருகேயுள்ள சுதந்திரபுரத்தில், ராமச்சந்திரன் என்ற சிற்பியின் சிற்பக் கலைக்கூடத்தில் அய்யனார் சிலை, பெரிய கருப்பர், சின்ன கருப்பர், சோனை கருப்பர், மதுரை வீரன், ராக்காயி அடைக்கன், சன்னாசி, சப்த கன்னிமார் சிலைகள் தயாரானது. சிலைகளை எடுக்க நேற்று கிராம மக்கள் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் செய்யப்பட்டது. பெண்கள் கும்மி அடித்து வழிபட்டனர். மேலும் கோயில், சாமியாடிகள் குறி சொல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து தாங்கள் கொண்டு வந்த வாகனங்களில் சிலைகளை ஏற்றிக்கொண்டு கிராம மக்கள் ஊர்வலமாக சென்றனர்.
சிற்பி ராமச்சந்திரன் கூறுகையில்: தமிழக மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் சிலைகள் அனுப்பப்படுகின்றன. தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலைகளுக்காக, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிகளிலிருந்து கருங்கற்கள் வாங்கிவரப்பட்டது. பெரும்பாலும், புதிய சிலைகளுக்கு பூஜை போட்டு எடுத்துச் செல்வது வழக்கம். தற்போது, இக்கிராம மக்களின் சிறப்பு பூஜை, சாமியாட்டம், சாமியாடிகளின் குறி சொல்லும் நிகழ்வு பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது என்றார்.