பதிவு செய்த நாள்
25
நவ
2022
08:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா நேற்று நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு உற்சவத்துடன் துவங்கியது. வரும், 27ம் தேதி கொடியேற்றம் நடக்கிறது. கார்த்திகை தீபத் திருவிழாவில் துவக்க விழாவாக இரவு உற்சவத்தில், திருவண்ணாமலை நகர காவல் தெய்வமான துர்க்கை அம்மன் சிறப்பு அலங்காரத்தில், காமதேனும் வாகனத்தில் மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவில், நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு, தீப திருவிழா எவ்வித இடையூறுமின்றி இனிதே நடக்க வேண்டி, நேற்று உற்சவ விழா நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து, 25ல், இன்று கோவில் காவல் தெய்வமான பிடாரி அம்மன், 26ல்முழு முதற் கடவுள் விநாயக பெருமானுக்கு உற்சவம் நடத்தப்படும். இதை தொடர்ந்து வரும், 27 ல், சதுர்த்தி திதியில், பூராட நட்சத்திரம், சித்தயோகத்தில், அதிகாலை, 5:30 மணிக்கு மேல், 7:00 மணிக்குள், விருச்சிக லக்னத்தில் கொடியேற்றம் நடக்க உள்ளது. இதை அடுத்து தினமும், காலையில் விநாயகர், சந்திரசேகரர்(அருணாசலேஸ்வரர் நின்ற நிலையில் அலங்காரம், மாலையில், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர், ஆகிய பஞ்ச மூர்த்திகள் வெவ்வேறு அலங்காரம், மற்றும் வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். ஏழாம் நாள் விழாவில் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடக்க உள்ளது. தொடர்ந்து, டிச., 6ல், அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம், அன்று மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இவ்விழாவிற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும், மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து செய்துள்ளது.