ராமேஸ்வரம் கோயிலில் என்ன நடக்கிறது ; பக்தர்களுக்கு அநீதி : வி.ஹச்.பி., புகார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2022 02:11
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் திருக்கோயில் அதிகாரி அலட்சியத்தால், பக்தர்களுக்கு பாதுகாப்பு இன்றி அசாதாரண சம்பவம் நடப்பதாக முதல்வருக்கு வி.ஹெச்.பி., மனு அனுப்பியது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சீர்திருத்தம் என்ற பெயரில் கடந்த சில மாதமாக கோயில் நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாக்கியும், கோயில் சிலைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. இதில் 4.8.22ல் கோயில் ஊழியருடன் ஒப்பந்த ஊழியர்கள் இணைந்து கோயில் உண்டியலை திறந்து எண்ணினார்கள். இதில் ஒப்பந்த ஊழியர் ஒருவர் உண்டியல் பணத்தை திருடி வீடுக்கு எடுத்து சென்று, பின் போலீசார் கைது செய்தனர். நவ., 19ல் கோயில் செக்யூரிட்டி காவலர்கள் பக்தர் ஒருவரை தரக்குறைவாக பேசி, சரமாரியாக தாக்கியது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர். நவ.,20ல் கோயில் மைய மண்டபத்தை ஆன்மிக மரபை மீறி தடுப்பு வேலியில் மூடினர். நவ., 23ல் சீர்பாதம் தொழிலாளிகள் இன்றி தங்க தேரை இழுத்ததில், தெலுங்கானா பெண் பக்தர் காயமடைந்தார். இக்கோயில் அதிகாரியின் அலட்சியமே பக்தர்கள் பாதிக்கின்றனர் என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர். இதுகுறித்து வி.ஹெச்.பி., மண்டல அமைப்பாளர் ஆ.சரவணன் கூறுகையில் : கோயில் துணை ஆணையர், இறைபக்தி இன்றி பக்தர்கள் மீது அக்கறை இன்றி ஆன்மிக மரபு மீறி தடுப்பு வேலிகள் அமைத்து உள்ளார். மேலும் இரவு நடை சாத்திய பின் கோயில் பிரகாரத்திற்குள் ஒப்பந்த ஊழியர்களை கொண்டு மராமத்து பணிகள் நடக்கிறது. இதனால் பழமையான சிலைகள் திருடு போகும் அபாயம் உள்ளது. அதிகாரியின் பொறுப்பற்ற செயலால் கோயிலில் தொடர்ந்து அசாதாரண சம்பவங்கள் நடக்கிறது. இதுகுறித்து முதல்வருக்கு புகார் மனு அனுப்பி உள்ளேன் என்றார்.