பழநி: பழநி மலைக்கோயில் உண்டியல் என்னும் பகுதிகளில் அனுமதிக்க பட்ட நபரை தவிர வேறு நபர்கள் நடமாட்டத்தை தடுக்க புதிய கருவி பரிசோதனை செய்யப்பட்டது.
பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை மாதம் தோறும் நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்களில் உண்டியல் எண்ணிக்கை நாட்கள் மாறுபடும். உண்டியல் எண்ணிக்கையில் கல்லூரி மாணவ மாணவிகள், வங்கி ஊழியர்கள், கோயில் ஊழியர்கள் ஈடுபடுவர். பாதுகாப்பு கருதி உண்டியல் எண்ணும் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராவால் கண்காணிக்கப்படுகிறது. மேலும் நகை சரிபார்ப்பு அதிகாரிகள், கோயில் தலைமை அதிகாரிகள், அறங்காவலர்கள் முன்னிலையில் உண்டியல் எண்ணிக்கை நடைபெறுகிறது.
மாதம் தோறும் கோடிக்கணக்கான ரூபாய் உண்டியல் காணிக்கையாக பழநி மலை கோயிலில் கிடைக்கிறது. இந்நிலையில் பழநி மலைக்கோயில் உண்டியல் எண்ணிக்கையில் பங்குபெறும் நபர்களை கண்டறியவும், அனுமதிக்கப்படாத நபர்கள் உண்டியல் எண்ணிக்கை நடைபெறும் பகுதியில் நுழைவதை தடுக்கவும், புதிய கருவி நேற்று சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டது. இக்கருவி உண்டியல் எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்ட நபர்களை மட்டும் உள் நுழையவும், வெளியேறவும் அடையாளம் காணும் வகையில் முக பதிவுகள் செய்யப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.